சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க சென்ற பெரியபாண்டியன் என்ற ஆய்வாளர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் சுட்டு கொல்லப்பட்டார். பெரியபாண்டியன் முதலில் கொள்ளையர்களால் சுடப்பட்டதாக செய்திகள் பரவிய நிலையில், முனிசேகர் என்ற காவலர் சுட்ட போது தவறி பெரியபாண்டியன் மீது பட்டதால் அவர் மரணமடைந்தது தெரிய வந்தது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ராஜஸ்தானை சேர்ந்த நாதுராம் என்பவனை போலீசார் தேடி வந்தனர். ஆனால், கிராம மக்களின் ஆதரவு இருப்பதால் நாதுராமை கைது செய்யமுடியாமல் போலீசார் தவித்து வந்தனர். அந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நாதுராம் தனது பேஸ்புக் பக்கத்தில் துப்பாக்கியுடன் நிற்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். இது தமிழக மற்றும் ராஜஸ்தான் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய ராஜஸ்தான் போலீசார், கடந்த 14ம் தேதி நாதுராமை கைது செய்தனர்.
அதன்பின் அவனிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அப்போது, தன்னை தமிழக போலீசார் சுற்றி வளைத்த போது துப்பாக்கி சத்தம் கேட்டது. எனவே, தன்னை போலீசார் சுட்டு விடுவார்கள் என பயந்து அங்கிருந்து தான் தப்பி சென்று விட்டதாகவும், பெரிய பாண்டியனை தான் சுடவில்லை எனவும் அவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.