ஆளுனர் ஒப்புதல் இல்லைனா என்ன! அரசாணை அமல்படுத்துங்க! – ரவிக்குமார் எம்.பி கோரிக்கை!

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (17:01 IST)
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பேசியுள்ள எம்.பி ரவிக்குமார் அரசாணை மூலம் அதை நிறைவேற்ற கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்குவது குறித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுனர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுனர் ஒப்புதலுக்கு தாமதமாகி வரும் நிலையில் நடப்பாண்டிலேயே இந்த இடஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்கட்சிகள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தமிழக அமைச்சர்கள் ஆளுனர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இடஒதுக்கீடு குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் ”ஆளுனர் ஒப்புதல் அளிக்க அவகாசத்தை அளிக்காமல் நிறைவேற்ற கேட்க முடியாது” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள விசிக எம்.பி ரவிக்குமார் “மருத்துவ படிப்புக்கான 7.5% உள்ஒதுக்கீட்டிற்கு ஆளுனரின் ஒப்புதலுக்காக காத்திருக்க தேவையில்லை. தமிழக அரசு அரசாணையின் மூலமாக இதை அமல்படுத்தலாம். எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்