அதிமுகவில் கூட இந்த விருதுக்கு ஆள் இல்லையா? முக ஸ்டாலின்

Webdunia
வியாழன், 16 ஜனவரி 2020 (17:31 IST)
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பல்வேறு விருந்துகள் வழங்கப்பட்டு வருவது தெரிந்ததே. அந்த வகையில் 2019ஆம் ஆண்டின்  கபிலர் விருது, புலவர் வெற்றி அழகன் அவர்களுக்கும் உ.வே.சா. விருது, வெ.மகாதேவன் அவர்களுக்கும் கம்பர் விருது, முனைவர் சரஸ்வதி ராமநாதன் அவர்களுக்கும் அம்மா இலக்கிய விருது, உமையாள் முத்து என்பவருக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பில் பெரியார் விருது குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை
 
இந்த நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது: `தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளில் தந்தை பெரியார் விருது யாருக்கு என்பது இந்த ஆண்டு விருதுப்பட்டியலில் அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டுக்கு முன், தங்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான பெண்மணி ஒருவருக்கு வழங்கினார்கள். இந்த ஆண்டு, சொந்தக் கட்சியிலும் அந்த விருதுக்கு ஆள் இல்லையா, அல்லது தங்கள் டெல்லி எஜமானர்களின் மனதைக் குளிர்விப்பதற்காக தந்தை பெரியார் விருது தவிர்க்கப்பட்டுள்ளதா? காரணம் என்ன என்பதை தமிழக மக்களுக்கு அ.தி.மு.க அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். தந்தை பெரியார் விருது திட்டமிட்டு தவிர்க்கப்பட்டிருப்பதற்கு, எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று பதிவு செய்துள்ளார்.
 
முக ஸ்டாலினின் இந்த பதிவுக்கு பின் அவசர அவசரமாக பெரியார் விருது அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரனுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்