சிறந்த நிர்வாகத்துக்கு தமிழகத்துக்கு முதல் இடம் அளித்துள்ள மத்திய அரசை கேள்வி கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.
இந்த ஆண்டின் சிறந்த நிர்வாகம் செய்த மாநிலங்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. அதில் தமிழகம் சிறந்த நிர்வாகம் மற்றும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தலில் முதல் இடத்தில் உள்ளது. இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வரும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் “தமிழக மக்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லை, நடப்பதற்கு சாலை இல்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதிமுக அமைச்சர்கள் ஊழலில் திளைக்கிறார்கள். இந்நிலையில் மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு சிறந்த நிர்வாகத்துக்கு முதல் இடம் அளித்துள்ளது “கும்பி எரியுது, குடல் கருகுது.. குளு குளு ஊட்டி ஒரு கேடா?” என்ற பழமொழியை நியாபகப்படுத்துவதாக கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்துக்கு இந்த அந்தஸ்தை கொடுப்பதன் மூலம் தமிழக அதிமுக அரசிற்கும், மத்திய பாஜக அரசிற்கும் அரசியல் தாண்டிய உறவு இருப்பதாக மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.