கடந்த 7-ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனையிட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் 20 மணி சோதனைக்கு பின்னர் கிளம்பினர். இதனையடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறையின் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க விஜயபாஸ்கரிடம் அறிவுறுத்தப்பட்டது.
இதனையடுத்து இன்று வருமான வரித்துறையின் விசாரணைக்கு ஆஜரானார் விஜயபாஸ்கர். இந்த விசாரணையின் போது அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியது வருமான வரித்துறை. இதில் விஜயபாஸ்கர் தான் பணப்பட்டுவாடா செய்ததை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வருகின்றன.
இது மட்டுமல்லாமல் விஜயப்பாஸ்கர் பல்வேறு முறைகேடுகள் ஈடுபட்டு வருமான வரித்துறையிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கு அமலாக்க பிரிவுக்கு மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
குறிப்பாக இந்த விசாரணையில் ஆர்கே நகர் தேர்தலில் பணம் விநியோகம் செய்ததை விஜயபாஸ்கர் ஒப்புக்கொண்டதாகவும், அந்த முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டதாக பேசப்படுகிறது. மேலும் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட மற்ற அமைச்சர்கள் குறித்த விவரங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் சரமாரியாக கேள்வியெழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களும் அடுத்தடுத்து சிக்கக்கூடும் என தகவல்கள் வருகின்றன.