மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த நவம்பர் வரை கெடு - அமைச்சர் எச்சரிக்கை

Webdunia
சனி, 24 ஆகஸ்ட் 2019 (19:08 IST)
அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த மூன்று மாதம் காலக்கெடு. அதற்குள் அதை செய்யாவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி வேலுமணி எச்சரித்துள்ளார்.

கடந்த சில மாதங்களில் தமிழ்நாட்டின் பல பகுதிகள் ஏகப்பட்ட தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்தன. இந்நிலையில் தற்போது பருவ மழை தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்ய தொடங்கியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற மழைநீ சேகரிப்பு பற்றிய ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் வேலுமணி மழைநீர் சேகரிப்பு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பது குறித்து அந்த கூட்டத்தில் விவாதித்துள்ளார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் “சென்னையில் உள்ள 2.35 லட்சம் கட்டடங்களை ஆய்வு செய்ததில் 1.36 லட்சம் கட்டிடங்கள் மட்டுமே மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் வைக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. 60 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டிடங்களில் மழைநீர் சேகரிக்கும் வசதி இல்லை. மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை நிறுவ 3 மாதங்கள் காலக்கெடு. அதற்குள் அமைக்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் எச்சரித்துள்ளார்.

சமீபத்தில் சென்னையில் பெய்த மழையால் 5 டி.எம்.சி வரை நீர் சேமிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்