சென்னையில் இன்று காலை முதல் மெட்ரோ ரயில் சேவையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதம் ஆகி வருவதாக தெரியவந்துள்ளது. இதனால், விமான நிலையம், பேருந்து நிலையம், மற்றும் ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்கள், விமான நிலையங்களை இணைக்கும் மெட்ரோ ரயில்கள் பயணிகளுக்கு பெரும் உதவியாக உள்ளது. தகுந்த நேரத்தில் பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்களை பிடிக்க மெட்ரோ ரயிலை பயணிகள் பெரிதும் நம்புகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று காலை முதல் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மெட்ரோ ரயில் சேவை தாமதமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் பணிமனை வரை செல்லும் நீல வழித்தடத்தில் 18 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படுவதாகவும், அதேபோல் விமான நிலையத்திலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் இடையே 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையத்திலிருந்து வண்ணாரப்பேட்டை செல்லும் ரயில்கள் 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு வழக்கம் போல் ரயில்கள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.