வேலூரில் மருத்துவ மாணவர்கள் 4 பேர் மீது குரங்கு ஒன்றை துன்புறுத்தி கொடூரமாக கொன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்ட மாணவர்கள் நான்கு பேரும் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 19-ஆம் தேதி வேலூர் கிறிஸ்தவ மெடிக்கல் கல்லூரி மாணவர்கள் விடுதியில் குரங்கு ஒன்று நுழைந்துள்ளது. அங்கு அலைந்து திரிந்த அந்த குரங்கை மாணவர்கள் 4 பேர் பெட்சீட் மூலம் பிடித்தி அதன் கை, கால்களை கட்டி அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
சக மாணவர்கள் முன்னிலையில் அந்த குரங்கை கம்பு, பெல்டு உள்ளிட்டவற்றால் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். குரங்கின் ஆசன வாயில் கம்பை விட்டு கீழ்த்தரமாக கொடுமைப்படுத்தி மிருகத்தனமாக நடந்து கொண்டுள்ளனர்.
அதன் பின்னர் அந்த குரங்கை எரித்து விடுதியில் ஒரு இடத்தில் புதைத்துள்ளனர். இதனை பார்த்த மாணவர்களில் சிலர் விலங்கின ஆர்வலர்களுக்கு தகவல் கொடுக்க, சம்பவம் வெளியே வந்துள்ளது. விலங்கின ஆர்வலர் ஏலும் பாக்கியம் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்க வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதைக்கப்பட்ட குரங்கின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் தொடர்புடைய நான்கு மாணவர்களும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. கடந்த சிலர் மாதங்களுக்கு முன்னர் சென்னையில் மருத்துவ மாணவர்கள் சில நாய் ஒன்றை மாடியில் இருந்து கீழே தூக்கி போட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதே போல இங்கும் மருத்துவ மாணவர்கள் குரங்கை கொடுமைப்படுத்தி கொன்ற சம்பவம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது. உயிரை காக்க வேண்டிய மருத்துவ மாணவர்கள் இந்த தொடர் செயல்பாடுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருப்பது வருந்தத்தக்கது என பலரும் கூறுகின்றனர்.