கடந்த எட்டு ஆண்டுகளாக மணிகண்டனும், அந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து அவர்களுக்கிடையே உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் பலமுறை தனிமையில் சந்தித்து வந்தனர்.
சில காலத்திற்கு பிறகு, வேலைக்காக சிங்கப்பூர் சென்ற மணிகண்டன், தொலைபேசியில் பேசி வந்தபோது, “திருமணம் செய்ய வேண்டுமென்றால் உங்கள் வீட்டில் எவ்வளவு நகை போடுவார்கள்?” என்று அப்பெண்ணிடம் கேட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்த சூழலில், கடந்த ஏப்ரல் மாதம் மணிகண்டனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. ஒரு மாதத்திற்கு முன் சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பிய மணிகண்டன், அப்பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இதையடுத்து, கடந்த திங்கட்கிழமை மணிகண்டனுக்கு திருமணம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது புகாரில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த மணிகண்டன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
புகாரின் அடிப்படையில், கிருமாம்பாக்கம் காவல்துறையினர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து, நேற்று இரவு அவரது வீட்டிற்குச் சென்றனர். ஆனால், மணிகண்டன் தலைமறைவாகிவிட்டார். இதன் காரணமாக, இன்று நடைபெற இருந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.