விஜய் நடித்த லியோ படத்தில் சொந்த அப்பாவே மகளை நரபலி கொடுப்பது போல உத்தர பிரதேசத்தில் தாத்தா பேரனை பலிக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த காமினி என்பவரது மகன் 17 வயதான பியூஷ். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக பள்ளிக்கு சென்ற பியூஷ் வீடு திரும்பவில்லை. இதனால் காமினி போலீஸில் புகார் அளித்த நிலையில், போலீஸார் பியூஷை தேடி வந்தனர்.
அப்போது, அப்பகுதியில் உள்ள ஓடை ஒன்றில் இளைஞர் ஒருவரின் தலை கிடப்பதாக போலீஸுக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்று பார்த்தபோது அது காணாமல் போன பியூஷின் தலை என்று தெரிய வந்தது. அதை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸார் அப்பகுதியில் வெவ்வேறு இடங்களில் பியூஷின் உடல் பாகங்களையும் கண்டறிந்தனர்.
விசாரணையில் ஒரு வயதான நபர் துணியில் இவற்றை சுற்றி ஆங்காங்கே வீசியது கண்டறியப்பட்டது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் அந்த வயதான நபர் பியூஷின் தாத்தா சரண்சிங் என தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து போலீஸார் சரண்சிங்கை கைது செய்து விசாரித்ததில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் தெரிய வந்துள்ளது.
சரண்சிங்கின் தம்பி வழி பேரன் தான் பியூஷ். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சரண்சிங்கின் மகனும், மகளும் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். இதனால் விரக்தியில் இருந்த சரண்சிங் உள்ளூர் மந்திரவாதி ஒருவரை அணுகியபோது, தம்பி வழி பேரன் பியூஷின் ஜாதகம்தான் சரண்சிங்கின் குடும்பத்தை ஆட்டி வைப்பதாகவும், அவரை பலி கொடுத்தால் பிரச்சினைகள் சரியாகும் என்றும் கூறியுள்ளார்.
இந்த மூட நம்பிக்கையில் பியூஷை அழைத்துச் சென்று தலையை வெட்டிக் கொடூரமாக கொலை செய்துள்ளார் சரண்சிங். இந்த சம்பவம் பிரயாக்ராஜில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K