அண்ணா.. கந்துவட்டி கொடுமைய நிறுத்துங்கண்ணா! - தற்கொலைக்கு முன்பு விஜய்க்கு கடிதம் எழுதிய தொண்டர்!

Prasanth K

வெள்ளி, 4 ஜூலை 2025 (11:36 IST)

புதுச்சேரியில் கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்ட தவெக தொண்டர், சாவதற்கு முன்பாக விஜய்க்கு எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

புதுச்சேரியில் உள்ள குயவர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்ரம். இறைச்சிக்கடையில் வேலை பார்த்து வரும் இவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டராகவும் இருந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்கள் முன்பாக சொந்த தொழில் தொடங்க மினி லாரி ஒன்று வாங்க கந்துவட்டிக்கு கடன் வாங்கியுள்ளார் விக்ரம்.

 

ஆனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவருக்கு விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்ததால் வேலைக்கு செல்ல முடியவில்லை. அதனால் வட்டியும் அதிகமான நிலையில், கந்துவட்டிக்காரர்கள் விக்ரமை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த விக்ரம் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

 

தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் விக்ரம். அதில் அவர் “கந்துவட்டிக் கொடுமையால் மனமுடைந்து தற்கொலை செய்துக் கொள்கிறேன். எனது ஆசை என்னவென்றால் கந்துவட்டி கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

விஜய் அண்ணா இனி வரும் ஆட்சி உங்களுடையதுதான், கந்துவட்டிக்காரர்கள் வட்டிக்கு விடவே பயப்பட வேண்டும். என் மனைவி, குழந்தைகளுக்கு தயவு செய்து ஏதாவது படிப்பு மற்றும் வாழ்க்கைக்கு உதவுங்கள் அண்ணா. எனது மகள் ஏஞ்சல் நன்றாக படிப்பாள். அவளை படிக்க வைங்க அண்ணா..

 

நான் இறந்ததும் என் உடல் உறுப்புகளை விற்று அதற்கு மாறாக எனது குழந்தை, மனைவிக்கு உதவ வேண்டும் என வேண்டுகிறேன்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இந்த தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரைவில் விஜய் அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்