போயஸ் கார்டன் சோதனைக்கு மைத்ரேயன் எதிர்ப்பு: வேதனை அளிக்கிறது!

சனி, 18 நவம்பர் 2017 (13:43 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லத்தில் நேற்று இரவு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுக ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியில் உள்ள மைத்ரேயன் எம்பி வருத்தம் தெரிவித்துள்ளார்.


 
 
கடந்த சில நாட்களாக சசிகலா குடும்பத்தினரை குறி வைத்து வருமான வரிதுறையினர் நடத்திய சோதனை தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் 187 இடங்களில் 1600 அதிகாரிகள் நடத்திய இந்த சோதனை இந்தியாவின் மெகா ரெய்டாக பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் நேற்று மாலை சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் ஷகிலா மற்றும் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆகியோரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை நடத்த வேண்டும் எனக்கூறி அவர்கள் இருவரையும்  இரவு  9.10 மணியளவில் போயஸ் கார்டன் இல்லத்திற்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர்.
 
21 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் நடைபெற்ற இந்த சோதனை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுகவின் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
 
தனது முகநூல் பக்கத்தில் இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், காரணம் என்னவாக இருந்தாலும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் சோதனை என்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. என்னை பொறுத்தவரையில் அம்மாவின் இல்லம் ஒரு கோயில் என குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்