தொடர் வருமான வரி சோதனைகள் ; சிறை தண்டனைகள் : சசிகலா குடும்பத்தினர் கலக்கம்

சனி, 18 நவம்பர் 2017 (12:30 IST)
வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனைகளாலும், தொடர்ச்சியாக உறவினர்களுக்கு சிறை தண்டனை கிடைத்து வருவதாலும் சசிகலா குடும்பத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர்.


 

 
சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சமீபத்தில் நடத்திய சோதனை நடத்தினர். இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், சசிகலா குடும்பத்தினர் ரூ.1430 கோடி வருமானத்திற்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பணம் ஏராளமான அசையா சொத்துகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதும், அந்த சொத்துக்கள் தமிழகம் முழுவதும் சுமார் 200 இடங்களில் வாங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. 
 
வருமான வரித்துறையினரின் இந்த அதிரடி சோதனை சசிகலா குடும்பத்தினருக்கு ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சி விலகாத நிலையில், சோதனையின் உச்சகட்டமாக நேற்று இரவு போயஸ்கார்டன் வீட்டில் 5 மணி நேரம் சோதனை நடைபெற்றுள்ளது. இதில் சில முக்கிய பென் டிரைவ், ஜெ.விற்கு வந்த கடிதங்கள் மற்றும் லேப்டாப் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.


 

 
இது ஒருபக்கம் எனில், சசிகலாவின் அக்கா மகள் மற்றும் அவரின் கணவர் பாஸ்கரன் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.68 கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருவருக்குமான சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உறுதி செய்தது. அதுபோக, சொகுசு வார் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கில் சசிகலாவின் கணவர் உட்பட 3 பேருக்கு சிறைத்தண்டனையை நேற்று நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
 
ஏற்கனவே சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ளனர். இந்நிலையில், மேலும் சிலருக்கும் சிறைத்தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதுபோக, அந்நிய செலவானி உட்பட பல வழக்குகளில் சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். எனவே, மேலும் சிலர் சிறைக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தொடர் வருமான வரி சோதனைகள், சிறை தண்டனைகள் என ரவுண்டு கட்டி அடிப்பதால் சசிகலாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்