யானைகள் வளர்ப்பு முகாமில் மக்னா யானை பலி! – அதிகாரிகள் அஞ்சலி!

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (08:44 IST)
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த மக்னா யானை வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது


 
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் மூர்த்தி என்ற மக்னா யானை பராமரிக்கப்பட்டு வந்தது. அந்த யானைக்கு  கும்கியாகவும் பயிற்சி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இந்த யானை 58 வயதை பூர்த்தி செய்ததன் அடிப்படையில் அதற்கு கடந்த 31.3 2022 அன்று பணி ஓய்வு வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே வயது முதிர்வு காரணமாக யானையின் உடல்நிலை மோசமாக இருந்தது. முதுமலை கால்நடை மருத்துவர்கள் மூர்த்தி யானைக்கு போதிய சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு மூர்த்தி யானை பரிதாபமாக உயிரிழந்தது.

இதனைத் தொடர்ந்து முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் இறந்த மூர்த்தி மக்னா யானைக்கு வனத்து வனத்துறை சார்பாக மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

தெப்பக்காடு பகுதியில் உள்ள பழங்குடியினர் மக்கள் இறந்த மூர்த்தி யானையை கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மூர்த்தி யானையின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த பார்வைக்கு வைக்கப்பட்ட பின் முதுமலை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மூர்த்தியின் உடலை அடக்கம் செய்தனர்.

இந்த மூர்த்தி என்ற மக்னா யானை கடந்த 1998 ஆம் வருடத்திற்கு முன் கேரளாவில் சுமார் 23 நபர்களை தாக்கி கொன்றதாக கூறுகின்றனர். அப்போது இந்த யானையை கேரளா வனத்துறையினர் சுட்டு பிடிக்க ஆணையிட்டிருந்தனர். அன்றைய தினத்தில் இந்த யானை கூடலூர் வனக்கோட்டத்திற்குள் நுழைந்து இரண்டு நபர்களை கொன்று விட்டதாக கூறப்படுகிறது. அச்சமயம் தமிழ்நாடு சீஃப் வைல்ட் லைஃப் வார்டன் அந்த யானையை மயக்கு ஊசி செலுத்தி பிடிப்பதற்கான ஆணையை வழங்கியதாகவும் கூறுகின்றனர். அப்பொழுது தெப்பக்காடு யானைகள் முகாமில் பணிபுரிந்து வந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி என்ற கால்நடை மருத்துவர் அந்த யானையை மயக்கு ஊசி செலுத்தி கடந்த 12-7-1998 ஆம் ஆண்டு வாச்சிக்கொல்லி என்ற இடத்தில் பிடித்ததாக கூறுகின்றனர்.

அப்பொழுது யானையின் உடம்பில் பல இடங்களில் காயங்கள் இருந்ததாகவும் அதனை மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி முறையாக மருத்துவம் செய்து குணப்படுத்தியதாகவும் பின்பு அந்த யானைக்கு மூர்த்தி என்று பெயர் சூட்டி முதுமலை யானைகள் முகாமில் பயிற்சி அளித்ததாகவும் மூர்க்கத்தனமாக இருந்த மூர்த்தி யானை முதுமலை யானைகள் முகாமில் மிக சாந்தமாக இதுவரை வாழ்ந்ததாகவும் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்