மதுரை மாட்டுத்தாவணி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி டோரா பாலா கடந்த சில நாட்கள் முன்னதாக உத்தங்குடி பகுதியில் உள்ள முட்புதரில் கொன்று சடலமாக வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. டோரா பாலாவை கொன்றது யார்? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் அம்பலக்காரன்பட்டியை சேர்ந்த வினோத் மற்றும் அவனது கூட்டாளிகள் டோரா பாலாவை கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. வினோத் மீதும் ஏகப்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அனைவரும் மது அருந்தி கொண்டிருந்தபோது வினோத்தின் தாய் குறித்து டோரா பாலா தவறாக பேசியதாகவும், அதனால் டோரா பாலாவை வினோத் மற்றும் அவனது கூட்டாளிகள் 5 பேர் சேர்ந்து கொன்று வீசியதும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் வினோத்தின் கூட்டாளி ஒருவனை கைது செய்த நிலையில் மற்றவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் ரவுடி வினோத் வண்டியூர் சோதனை சாவடியை அடுத்த கல்குவாரி ஒன்றில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் தனிப்படை போலீஸார் கல்குவாரி விரைந்துள்ளனர். அங்கு பதுங்கியிருந்த வினோத் அரிவாளை காட்டி போலீஸாரை மிரட்டியதுடன், ஏட்டு சரவணனை வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார். அப்போது இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் துப்பாக்கியால் சுட்டு வினோத்தை பிடித்துள்ளார். வினோத் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ரவுடிகள் சுட்டுப்பிடிக்கப்படும் சம்பவம் அதிகரித்துள்ளது. முன்னதாக கோவை கோர்ட் கொலை வழக்கில் குன்னூரில் பதுங்கியிருந்த குற்றவாளிகளும், திருவள்ளூரில் பதுங்கியிருந்த குற்றவாளி ஒருவரும் தப்பிக்க முயன்றபோது முழங்காலில் சுட்டுப் பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.