17 ஆண்டுகளுக்கு பின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. எப்போது?

Mahendran
புதன், 27 நவம்பர் 2024 (12:09 IST)
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2009 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதியாக இருந்துள்ளது. இதன்படி, 2021 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், 17 ஆண்டுகளுக்கு பிறகு 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஒரு மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை அடுத்து, சீரமைப்பு பணிக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருந்தாலும், நிர்வாக காரணங்களால் பணிகள் தாமதமாக தொடங்கி நடந்து வருகின்றன.
 
இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்குள் திருப்பணிகளை முடிக்குமாறு கோயில் நிர்வாகத்திற்கு அறநிலைத்துறை அறிவுறுத்தியுள்ளது. தீ விபத்தால் சேதம் அடைந்த மண்டபம் தவிர மற்ற திருப்பணிகளையும் செய்து முடிக்க வேண்டும். இதனால்தான் 2021 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.
 
ஏற்கனவே, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இரண்டு ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். தற்போது நான்கு கோபுர பணிகள் மற்றும் இதர திருப்பணிகள் நடந்து வருவதாகவும், திட்டமிட்டபடி 2026 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
 
இதனை அடுத்து, மதுரை மீனாட்சி அம்மன் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்