கடந்த 2023ஆம் ஆண்டு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கார் ஒன்றை முந்தி செல்ல முயன்றபோது விபத்தில் சிக்கினார் வாசன். இந்த விபத்தில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, தனது உரிமத்தை மீண்டும் வழங்கக் கோரி டிடிஎஃப் வாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என். மாலா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த பின்னர், சட்டப்படி புதிதாக உரிமம் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என்று வாதிட்டார். ஆனால், ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் உரிமம் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமே அணுகலாம் என்று கூறி, டிடிஎஃப் வாசனின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.