ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அவரது கணவர் மாதவன் பிரியப்போவதாகவும், விரைவில் விவாகரத்து வேண்டி மாதவன் நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அதிமுக தொண்டர்கள் அவரது அண்ணன் மகள் தீபாவை வேறு வழியில்லாமல் அரசியலுக்கு அழைத்தனர். ஆனால் அரசியலின் ஆழம் புரியாத தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை உருவாக்கி அரசியலில் குதித்தார். ஆனால் ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதும் நிலமை தலைகீழாக மாறியது. தீபாவை ஆதரித்தவர்கள் மொத்தமாக ஓபிஎஸ் அணியில் ஐக்கியமாகினர்.
தீபா பேரவை ஆரம்பிக்கும் முன்னரே அவரது கணவர் மாதவன் அவருக்கு பின்னால் இருந்து அவரை இயக்கிக்கொண்டு இருந்தார். செய்தியாளர்கள் சந்திப்பிலும் கூடவே இருப்பார். இந்நிலையில் திடீரென தீபாவை சுற்றி தீய சக்திகள் இருக்கின்றன பேட்டியளித்த மாதவன் தனி கட்சி தொடங்க இருப்பதாக கூறி அதிர்ச்சியளித்தார்.
இதன் பின்னர் தீபாவுக்கும் மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக செய்திகள் வைரலாக பரவியது. ஆனால் தீபாவிடம் இருந்து மாதவன் பண மோசடி செய்ததாகவும் செய்திகள் உலாவின. இந்த சூழலில் ஆர்கே நகர் தேர்தலில் வேட்பு மனுவில் கணவர் மாதவனின் பெயரை குறிப்பிடாமல் தாக்கல் செய்தார் தீபா.
ஆனால் தீபா பதற்றத்தில் குறிப்பிட மறந்துவிட்டார் என நொண்டி சாக்கு சொல்லி மனதை தேற்றிக்கொண்டார் மாதவன். தொடர்ந்து தீபாவின் மனதை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினார் மாதவன். ஆனால் மாதவனின் எந்த சமாதான முயற்சியும் தீபாவிடம் எடுபடவில்லை. குறிப்பாக ஆர்கே நகர் தேர்தல் ரத்துக்கு பின்னர் இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இதனால் வேறு வழியில்லாமல் தீபாவிடம் விவாகரத்து பெற்று பிரிந்துவிட மாதவன் முடிவெடுத்துள்ளதாகவும், விரைவில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.