ஈஷா மையம் குறித்து லதா மனு : மகளிர் ஆணையம் விசாரணை

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (19:37 IST)
கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் பிரபல ஆன்மீகவாதியான ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையம் இயங்கி வருகின்றது. ஈஷா யோகா மையத்தில் திருமணமாகாத தனது இரு மகள்கள் கட்டாயப்படுத்தி சன்னியாசிகளாக ஆக்கப்பட்டிருப்பதாக வேளாண்மைக் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் புகார் அளித்திருந்தார்.
 

 
தனது இரு மகள்களை கட்டாயப்படுத்தி மொட்டையடித்து துறவறம் மேற்கொள்ள வைத்திருப்பதாகவும், அங்குள்ளவர்களுக்கு போதை வஸ்துகள் உட்கொள்ளவைப்பதும், மூளைச்சலவை செய்து சொத்துக்களை எழுதி வாங்குவதாகவும் பரபரப்பு குற்றம்சாட்டி இருந்தார்.
 
இந்தப் புகார் குறித்து ஈஷா மையத்தில் கேட்டபோது, அந்தப் பெண்கள் விரும்பியே இங்கு தங்கியிருப்பதாகத் தெரிவித்தர். அந்தப் பெண்கள் விரும்பினால் பெற்றோருடன் செல்லலாம் என்றும் யாரும் அவர்களைத் தடுக்கவில்லை என்றும் நிர்வாகி ஒருவர் கூறி இருந்தார்.
 
இந்நிலையில், அப்பெண்களின் தாயார் சத்யவதி, ஈஷா யோகா மையத்தில் தனது 2 மகள்கள் கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இதற்கிடையில், கடந்த 4ஆம் தேதி, இரு பெண்களில் ஒருவரான லதா தேசிய மகளிர் ஆணையத்துக்கு மனு ஒன்றை அனுப்பியிருந்தார்.
 
அந்த மனுவில், ‘‘ஈஷா யோகா மையத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். உரிமைகளை பறிக்கும் விதமாக பெற்றோர் நடந்து கொள்கின்றனர். மர்ம நபர்கள் சிலர் போன் மூலம் மிரட்டல் விடுக்கின்றனர். விருப்பப்படி வாழ்வதற்கு தேசிய மகளிர் ஆணையம் பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
 
இதனடிப்படையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் சுஷ்மாசாகு ஈஷா யோகா மையத்தில் இரு பெண்களிடமும் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினார். இதனை தொடந்து கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள விருந்தினர் இல்லத்தில் பேராசிரியர் காமராஜிடம் விசாரணை மேற்கொண்டார்.
 
விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் காமராஜ், ஈஷா மையத்தில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக மகளிர் ஆணைய உறுப்பினர்களிடம் தெரிவித்து இருப்பதாக தெரிவித்தார்.
 
மேலும், ஈஷா மையத்தை விட்டு வெளியே தனது பெண்களிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தனது மகள்கள் மட்டுமின்றி அங்குள்ள 200 சன்னியாசி பெண்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் மகளிர் ஆணைய உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
 
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் சுஷ்மாசாகு கூறும்போது, “ஈஷாவில் உள்ள 2 பெண்கள் கொடுத்த வாக்குமூலம் மற்றும் பேராசிரியர் காமராஜிடம் நடத்திய விசாரணை ஆகியவை அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு விரைவில் தேசிய மகளிர் ஆணையத்தில் அளிக்கப்படும்” என்றார்.
அடுத்த கட்டுரையில்