பாரபட்சம் காட்டும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் - முற்றுகையிட்ட பொதுமக்கள்

Webdunia
செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (15:54 IST)
கரூரில் சுற்றுவட்டச்சாலை அமைக்கும் பணியை மாற்று இடத்தில் தேர்வு செய்ய அதிகாரிகள் முயற்சி செய்த போது, பொதுமக்கள் நில அளவையாளர்களை முற்றுகையிட்டு பணிகளை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
கரூர் மாவட்ட அளவில், சுற்றுவட்டச்சாலை அமைக்கும் பணி கடந்த 2013ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 18ம் தேதி அரசாணை எண் 164-ல் பிறப்பிக்கப்பட்டு, நில ஆர்ஜிதம் செய்வதற்காகவும், அதற்கான வேலைக்காக ரூ.77 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது. நில அளவை பணியையும், முடிவடைந்த நிலையில், அதற்காக. 2016ல் டிசம்பர் மாதம் 1ம் தேதி தனி வட்டாட்சியர் நியமிக்கப்பட்டும், அதற்குண்டான வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டது. 
 
இதற்காக, கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் 28 அதிகாரிகள் நில ஆர்ஜிதம் செய்ய நியமிக்கப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு பதிவேடு நகல் வட்டாட்சியரிடம் வழங்கப்பட்டும், இதுவரை நில உரிமையாளர்களுக்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கான நோட்டீஸ் அனுப்பாமல், கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் தலையீட்டினால், அந்த திட்டம் மாற்றப்பட்டு, அதே ரிங் ரோடு., மாற்றுவழியில் அமைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
 
ஆங்காங்கே நில அளவையாளர்களும் நிலத்தை அளக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து கரூர் மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தின் அருகே நில அளவை எடுக்கும் போது அங்குள்ள பொதுமக்கள் திடீரென்று எதற்காக இந்த நிலம் அளவை செய்கின்றீர்கள்? என்று கேட்க, அந்த நில அளவையாளர்கள் “நாங்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றோம், எங்களுக்கும், ஒன்றும் தெரியாது., கரூரில் வர உள்ள சுற்று வட்டச் சாலை அமைக்கும் பணிக்காக” என்று கூறினர்.
 
அப்போது, அவர்களை முற்றுகையிட்ட ஊர் பொதுமக்கள், ஏற்கனவே முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, அதற்கான திட்டங்களுக்கு எல்லா வேலைகளும் செய்து முடித்து விட்டு, நில ஆர்ஜித வேலைகளுக்கான நோட்டீஸ்களும் கொடுக்க தனி வட்டாட்சியரும் நியமிக்கப்பட்டு அவர் (வி.செந்தில் பாலாஜி) கொண்டு வந்த திட்டத்தினால்., தற்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதே திட்டத்தை மாற்று வழியில் கொண்டு செல்கின்றாரா என்று கேள்வி எழுப்பியதோடு, அவர்களை சரமாரி கேள்வி கேட்டனர். இதையடுத்து, நில அளவையாளர்கள்., அங்கிருந்து நில அளவைக் கருவிகளை எடுத்து கொண்டு சென்றனர்.
 
மேலும், இந்த சுற்றுவட்டச்சாலை அமைக்கும் பணியினால், ஏற்கனவே கோயம்பள்ளி –வீரராக்கியம் இடையே அமராவதி ஆற்றின் உயர்மட்டப்பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் அப்படியே உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த 2017 ம் வருடம், மே மாதம், வாங்கல்,வாங்கல்பழையூர், குப்புச்சிபாளையம், மேலசக்கரபாளையம், கீழ சக்கரபாளையம், மாரிகவுண்டண்பாளையம், வேலாயுதம்பாளையம், நல்லகுமாரன்பாளையம், காட்டூர், கோப்பம்பாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கரூர் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், மாவட்டத்தின் தொழில்வளத்தை பெருக்கவும் வாங்கல் காவிரி பாலம் முதல் எல்லைமேடு வரையிலான சுற்றுவட்டச்சாலை அமைக்க அரசு ஆணை 19.10.2013-ல் வெளியிட்டது. 
 
இதற்கு, ரூ.77 கோடி நிதியும் முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்ட நிலையில், உத்தேசிக்கப்பட்ட வழித்தடத்திலேயே புறவழி அணுகுசாலை அமைப்பதில் ஆட்சேபனை உள்ளதாக சிலர் புகார் கூறி, இத்திட்டத்தை நிறுத்த முயற்சி செய்து வருகிறார்கள். 
 
எனவே இத்திட்டத்தை ஏற்கெனவே உத்தேசிக்கப்பட்ட வழித்தடத்திலேயே புறவழி அணுகுசாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த ஊர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் கொடுத்திருந்தும், அந்த மனுக்களை உதாசினப்படுத்தும் விதமாகவும் இந்த செயல் உள்ளது என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

- சி. ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்