25 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பால் எப்போது கிடைக்கும்? : கருணாநிதி கேள்வி

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (17:11 IST)
தேர்தல் அறிக்கையி கூறியது படி பாலின் விலை லிட்டருக்கு ரூ.25 க்கு எப்போது கிடைக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.


 

 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தமிழகச் சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் “மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் பேணும் வகையில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும் இரும்புச் சத்துகள் செறிவூட்டப்பட்ட ஆவின் பால் ஒரு லிட்டர் 25 ரூபாய் எனக் குறைந்த விலையில் வழங்கப்படும். இதனால் ஆவினுக்கு ஏற்படும் இழப்பு அரசால் வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தார்கள்.
 
இது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றி வைப்பார்கள் என்று நம்பித் தான் 130 இடங்களில் வெற்றி பெறச் செய்து அ.தி.மு.க. வை ஆட்சிக் கட்டிலில் தமிழக மக்கள் அமர வைத்தார்கள். ஆட்சியில் அமர்ந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. பால் இன்று என்ன விலை? வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும் இரும்புச் சத்துகள் செறிவூட்டப்பட்ட “ஆவின்” பால் லிட்டர் ஒன்றுக்கு 48 ரூபாய்க்கு நுகர்வோருக்கு வழங்கப்படுகிறது. அந்த 48 ரூபாய் என்ற விற்பனை விலையில் இந்த மூன்று மாதத்தில் ஒரு ரூபாய் கூடக் குறைக்க வில்லை; குறைக்கும் நடவடிக்கைக்கான எவ்வித அறிகுறியும் தென்படவில்லை.

ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கு மக்களுக்கு வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் உறுதி கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் அதைப் பற்றி கவலைப் படுகிறார்களா? இல்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஆட்சியிலே வெற்றி! பிறகு என்ன? மக்கள் பிரச்சினைகளை எடுத்து வெளியிடும் ஏடுகளாவது பால் விலை குறித்து ஜெயலலிதா கொடுத்த உறுதிமொழியையும், இன்று உள்ள நிலைமையையும் விளக்கி, ஆளுவோர்க்கு அழுத்தம் கொடுக்க முன்வந்திருக்கலாம் அல்லவா! 
 
ஆனால் ஏடுகளில் இன்று ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது தனியார் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் உயர்த்தப்படுகிறதாம். தனியார் பால் நிறுவனமான “ஹெரிடேஜ்” நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு நாளை முதல் 2 ரூபாய் உயர்த்தியிருக்கிறார்கள். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் “ஹட்சன்” நிறுவனமும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் “திருமலா” நிறுவனமும் தங்களின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் என்று ஒவ்வொரு முறையும் உயர்த்தியிருக்கின்றன. இப்படி விலை உயர்த்தப்படுவதன் காரணமாக, தனியார் நிறுவனங்களின் பால் ஒரு லிட்டர் 54 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 
 
பாலின் விலையை தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே போகின்றன. ஆவின் பால் விலையை லிட்டர் 25 ரூபாயாகக் குறைக்கப் போகிறோம்; உற்பத்தியாகும் பால் முழுவதையும் “ஆவின்” நிறுவனமே கொள்முதல் செய்யும் என்றெல்லாம் சொன்ன அ.தி.மு.க. ஆட்சியினர் இதைப் பற்றி யெல்லாம் சிந்தனை சிறிதுமின்றி - எங்கேயோ இது நடக்கிறது, நமக்கென்ன என்ற ரீதியில் செயல்படுகிறார்கள்!
 
தனியார் பால் நிறுவனங்கள் தாங்கள் கொள்முதல் மற்றும் விற்பனை செய் கின்ற பாலுக்கான விலையைத் தமிழக அரசே நிர்ணயம் செய்கின்ற வகையில் அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள்-தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் அ.தி.மு.க. அரசுக்கு வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை அலட்சியம் செய்யாமல் பரிசீலனை செய்ய வேண்டும்.
 
பால் என்பது ஏழை பணக்காரர் என்ற வேறுபாடின்றி அனைத்துப் பிரிவினர்க்கும், குறிப்பாகக் குழந்தைகளுக்கும், முதியோர்க்கும், நோயுற்றோ ருக்கும் தேவைப்படும் அத்தியாவசியமான நுகர்பொருளாகும். எனவே உற்பத்தி யாகும் பால் முழுவதையும் “ஆவின்” மூலம் கொள்முதல் செய்து, ஒரு லிட்டர் பாலை 25 ரூபாய்க்கு வழங்குவதற்கான முயற்சியை மேலும் தாமதிக்காமல் மேற்கொள்வது ஒன்று தான், தமிழகப் பால் உற்பத்தியாளர்களையும், நுகர்வோரையும் பாதுகாத்திடும் நடவடிக்கையாக மட்டுமின்றி, தனியார் பால் விற்பனையையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் என்பதை ஆட்சியினர் ஆழ்ந்த கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
 
என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்