விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் அஜித், கமல்ஹாசன் ஆகியோர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இதனால் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர மற்ற 232 தொகுதிகளிலும் இன்று [16-05-16] திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விருவிருப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே திமுக தலைவர் மு.கருணாநிதி கோபாலபுரத்தில் வாக்களித்தார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அரும்பாக்கத்திலும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஹன் விருகம்பாக்கத்திலும் வாக்களித்தனர்.
அதேபோல் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா, மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் தேனாம்பேட்டையில் தனது வாக்கை செலுத்தினார். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சாலிக்கிராமத்தில் வாக்களித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் திருத்துறைப்பூண்டியிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னை ஆதம்பாக்கத்திலும் தங்களது வாக்குகளை செலுத்தினர்.
நடிகர்கள் வாக்களிப்பு:
அதேபோல, வாக்குப்பதிவு தொடங்கிய சிறுதி நேரத்திலேயே நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் தனது வாக்கினை செலுத்தினார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலும், கமல்ஹாசன், நடிகை கவுதமி மற்றும் மகள் அக்ஷ்ராஹாசன் ஆகியோருடன் சென்னை ஆழ்வார்பேட்டையிலும் வாக்களித்தனர்.