ராம்குமாரின் தற்கொலை பரபரப்பு, தன் வேலையை காட்டியது கர்நாடகா.....

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2016 (11:05 IST)
கடந்த வாரம் பெரிதும் கவனிக்கப்பட்ட விஷயமாக காவிரி நதிநீர் விவகாரம் இருந்தது. முழுயடைப்பு, வாகன எறிப்பு, தமிழர்கள் தாக்கப்படுதல் என பெரும் கலவரமாய் இருந்தது. 

 
ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் ராம்குமார் மரணச் செய்தி பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில் காவிரியில் தண்ணீர் திறப்பதை நிறுத்தி விட்டது கர்நாடகா. 
 
காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை. இதையடுத்து உச்சநீதிமன்றத்தை நாடியது தமிழக அரசு. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் முதலில் 10 நாட்களுக்கு தினசரி விநாடிக்கு 15,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டது. 
 
இதையடுத்து இதனை எதிர்த்து கர்நாடகத்தில் போராட்டம் வெடித்தது. இருப்பினும் வேறு வழியில்லாமல் கர்நாடகு அரசு தண்ணீர் திறந்து விட்டது. இந்நிலையில் முந்தைய உத்தரவை மாற்ற வேண்டும் என்ற கர்நாடகாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. 
 
மேலும் 20ம் தேதி வரை தினசரி விநாடிக்கு 12,000 கன அடி நீரை திறந்து விடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பெங்களூரில் மிகப் பெரிய கலவரம் வெடித்தது. தமிழர்களின் வாகனங்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டன. 
 
இதற்கிடையே, திடீரென கே.ஆர்.எஸ் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தி விட்டது கர்நாடக அரசு. தமிழகத்தின் ஒட்டுமொத்த கவனமும் தற்போது ராம்குமார் விவகாரத்தில் திரும்பியுள்ள நிலையில் கர்நாடகம் தண்ணீர் திறப்பை நிறுத்தியுள்ளது. போதிய அளவில் நீர்மட்டம் இல்லை என்று கர்நாடக அரசு தரப்பில் இதற்குக் காரணம் கூறப்பட்டுள்ளது.
 
கர்நாடக விவகாரத்தில் இளைஞர் விக்னேஷ் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்