கர்நாடக அணைகளில் சராசரியை காட்டிலும் சுமார் 28 சதவீத நீர் குறைவாக உள்ளது என்றும், எனவே தினமும் 1 டி.எம்.சி தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
நீர் குறைவாக உள்ளதை காவிரி மேலாண்மை ஆணைய ஒழுங்காற்று குழு கூட்டத்தில் வெளிப்படுத்தினோம் என கூறியுள்ள முதல்வர் சித்தராமையா, ஆனால் காவிரி ஒழுங்காற்று குழு தினமும் 1 டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது என்றும், தற்போதுள்ள சூழலில் தினமும் 1 டி.எம்.சி தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை என்றும் உறுதிபட கூறியுள்ளார்.
காவிரி ஒழுங்காற்று குழுவின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், தற்போதைக்கு கர்நாடக அணைகளுக்கு என்ன நீர்வரத்து உள்ளதோ அதை திறந்து விடுகிறோம் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணைய ஒழுங்காற்று குழு கூட்டம் உத்தரவிட்டும் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ள நிலையில் தமிழக அரசு இனி என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் கர்நாடகா அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீரை பெற வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் கர்நாடக முதல்வரின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது