சென்னையில் ஒரு நீரவ் மோடி : வங்கிகளில் ரூ. 824 கோடி மோசடி

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (11:59 IST)
சென்னையை சேர்ந்த நகைக்கடை தொழில் அதிபர் ஒருவர் போலி ஆவணங்களை தாக்கல் செய்து வங்கிகளில் ரூ.824 கோடி மோசடி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
ஏற்கனவே வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி ஆகியோர்  அதைக் கட்டாமல் வெளிநாட்டிற்கு தப்பி விட்டனர். இந்நிலையில் சென்னையை சேர்ந்த கனிஷ்க் கோல்டு நிறுவனம் வங்கிகளில் ரூ. 824 கோடி மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த பூபேஷ்குமார் மற்றும் அவரின் மனைவி நீடா ஆகியோர் கே.ஜி.பி.எல் எனப்படும் கனிஷ்க் கோல்டு பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில் காஞ்சிபுரம், நடராஜபுரம், புக்கத்துறை ஆகிய இடங்களில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வந்தனர்.
 
சென்னை உட்பட நாடு முழுவதும் உள்ள பிரபல நகைக்கடைகலுக்கு அவர்கள் விதவிதமான டிசைன்களில் நகை தயாரித்து சப்ளை செய்து வந்தனர்.  அதேபோல், கனிஷ்க் என்ற பெயரில் தங்கம் மற்றும் வைர நகை விற்பனை செய்யும் கடையையும் நடத்தி வந்தனர். அவர்களும் சென்னை யானைக்கவுனியை சேர்ந்த சிலருடன் கூட்டு சேர்ந்து சென்னையில் உள்ள பல வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்றனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் தங்களின் நிறுவனம் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருப்பதால் போலி ஆவணங்களை தயார் செய்து எஸ்.பி.ஐ. பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐ.டி.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 14 வங்கிகளில் ரூ. 824.15 கோடி கடன் பெற்றனர். 

 
அந்தப்பணத்தை வைத்து சென்னை, மும்பை, ஹைதராபாத், கொச்சி, துபாய் உள்ளிட்ட பகுதிகளில் நகைக்கடைகளை திறந்துள்ளனர். ஆனால், முதலீடு செய்துள்ள அளவுக்கு வருமானம் இல்லாததால் வங்கிகளில் கட்டிய கடனை செலுத்த முடியவில்லை. எனவே, அவர்கள் தாக்கல் செய்த ஆவணங்களை அதிகாரிகள் ஆராய்ந்த போது அவைகள் போலி என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களுக்கு அளித்த கடன் தொகையை மீட்கும் பணியில் வங்கிகள் இறங்கியுள்ளன. இது தொடர்பாக டில்லி சி.பி.ஐ அதிகாரிகளிடம் வங்கிகள் புகார் கொடுத்துள்ளனர்.
 
இதுபோக, இந்த நகைக்கடை நிறுவனம் ரூ.20 கோடிக்கு மேல் கலால் வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்