2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி நேரில் ஆஜர்

Webdunia
புதன், 13 ஜூலை 2016 (09:56 IST)
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
 

 
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவிற்கு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும், இதில் பல ஆயிரம் கோடி ரூபாய்அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
 
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் டி.வி.க்கு சட்டவிரோதமாக 200 கோடி ரூபாயை பரிமாற்றம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பேரில் ஆ.ராசா, கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
 
இந்நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த 2 வழக்குகளும் நேற்று செவ்வாயன்று [12-07-16] தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அப்போது, வழக்கு விசாரணைக்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது.
 
இதையடுத்து, சிபிஐ தொடர்ந்த வழக்கை ஜூலை 25-க்கும், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை செப்டம்பர் 1ஆம் தேதிக்கும் நீதிபதி ஓ.பி. ஷைனி ஒத்திவைத்தார். முன்னதாக இந்த இரண்டு வழக்குகள் தொடர்பாகவும், கனிமொழி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அடுத்த கட்டுரையில்