போலீசுக்கு மாமூல் கொடுத்தும் நிம்மதியாக தொழில் செய்ய முடியாத விரக்தியில் காஞ்சிபுரம் அருகே பார் உரிமையாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்போரூர் , கேளம்பாக்கம், மாமல்லபுரம் , சிங்கபெருமாள் கோயில் பகுதிகளில் பார் நடத்தி வருபவர் நெல்லையப்பன். இவர் திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர். இவர் தன்னுடைய பார்கள் பிரச்சனையின்றி இயங்க அவ்வப்போது காவல்துறையினர்களுக்கு மாமூல் கொடுத்து வந்துள்ளார். ஆனாலும் காவல்துறையினர் இவரிடம் அதிக மாமூல் கேட்டு தொல்லை செய்ததாக தெரிகிறது.
இதனால் ஒரு கட்டத்தில் மனமுடைந்த நெல்லையப்பன் நேற்று காலை மாமல்லபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன் திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர் மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி காயத்ரிதேவி அவரிடம் வாக்குமூலம் பெற்றார். வாக்குமூலம் கொடுத்த சில நிமிடங்களில் நெல்லையப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் நெல்லையப்பன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தற்கொலை முடிவு குறித்து விளக்கமாக பதிவு செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.