நேற்று முன் தினம் இரவு திருச்சி திருவெறும்பூரில் 3 மாத கர்ப்பிணி பெண் உஷா தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களை விரட்டி வந்த காவல்துறை ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில் இருவரும் நிலைதடுமாறி விழுந்தனர். இதில் உஷா பரிதாபமாக உயிரிழந்தார்.
உஷாவின் மரணத்திற்கு காரணமாக ஆய்வாளர் காமராஜ், நேற்று கைது செய்யப்பட்டு அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரை வரும் 21ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்றே அவர் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் உஷாவின் உயிரிழப்புக்கு காரணமான காவல் ஆய்வாளர் காமராஜ் சற்றுமுன்னர் திருச்சி சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. உஷாவின் உயிரிழப்பை அடுத்து பொதுமக்கள் காமராஜை விரட்டியதில் கீழே விழுந்த அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த காயத்திற்கு சிகிச்சை அளிக்கவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.