போதுமான பொரும்பான்மை இல்லாத காரணத்தால் எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த விவகாரம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் யார் ஆட்சி அமைப்பது என்பதுதான் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்படும் விவகாரமாக மாறியுள்ளது. முதல்வரை தேர்ந்தெடுக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மாலை சரியாக 4 மணிக்கு தொடங்க இருந்தது.
அந்நிலையில், இன்று மாலை 3.15 மணியளவில் எடியூரப்பா சட்டசபையில் உரையாற்றத் தொடங்கினார். சுமார் 45 நிமிடங்கள் அவர் மிகவும் உருக்கமாக பேசினார். அதன்பின்பு, தான் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துவிட்டு அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார். பெரும்பான்மை இல்லாத காரணத்தால் நம்பிக்கை வாக்கெடுப்பை கோராமலேயே அவர் சோகமாக கிளம்பி சென்றார்.
இந்நிலையில், இதுபற்றி நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் “கர்நாடகத்தில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும். வாழிய பாரத மணித்திருநாடு” என பதிவு செய்துள்ளார்.
அதாவது, பாஜக இல்லாத நிலையை இந்தியா முழுவதும் உருவாக்குவோம் என்கிற ரீதியில் அவர் கருத்து தெரிவித்துள்ளார் எனத் தெரிகிறது. பாஜகவிற்கு எதிராக கமல்ஹாசன் கருத்து தெரிவிப்பதில்லை என்கிற கருத்து நிலவி வந்த நிலையில், அவர் இதுபோல கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.