பிக்பாஸ் சர்ச்சை : கைது செய்வது பற்றி கவலையில்லை - கமல்ஹாசன் அதிரடி

Webdunia
புதன், 12 ஜூலை 2017 (18:05 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பதோடு, அதில் இடம் பெற்றுள்ள நடிகர், நடிகைகள் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்ற இந்து மக்கள் கட்சியின் புகார் குறித்து கமல் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.


 

 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே இதன் மீதான விமர்சனம் அதிகரித்தவாறே உள்ளது. இதுவே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம்.
 
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ஆபாச நிகழ்ச்சி எனவும், இதில் ஆபாச வார்த்தைகளை பேசுகின்றனர். 75 சதவீதம் நிர்வாணமாக நடித்து வருகிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்தை கிண்டலடித்துள்ளார்கள் என இந்து மக்கள் கட்சி புகார் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் அளித்த புகார் மனுவில், இந்திய மக்களின் கலாச்சார பண்பாடுகளை சீரழிக்கும் ஆபாச நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவும். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனையும், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நபர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன்  “கைதாவது பற்றி கவலையில்லை.  இந்த புகார்கள் மலிவானவை. கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர்கள் நடனம் ஆடுகிறார்கள். சிக்ஸரும், பவுண்டரியும் அடிக்கும் போது சியர்லீடர்ஸ் நடனம் ஆடுகிறார்கள். அவர்களை எல்லாம் கைது செய்வீர்களா?. என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். நான் ஒரு கம்யூனிஸ்ட் என இந்துத்துவா அமைப்புகள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றன. நான் ஒரு பகுத்தறிவுவாதி. உலகுடன் ஒத்துப்போகும் எந்த விஷயத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்” என அவர் கூறினார்.
அடுத்த கட்டுரையில்