பாடம் கற்க மாட்டீர்கள் ; நாங்கள் கற்று கொடுக்கிறோம் - கமல்ஹாசன் சீற்றம்

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (18:53 IST)
மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தமிழக அரசியல்வாதிகள் பாடம் கற்க மாட்டார்கள். நாங்கள் பாடம் கற்பிப்போம் என நடிகர் கமல்ஹாசன் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் பலரும் அரசுக்கு கண்டனங்களும் அனிதாவின் மரணத்திற்கு வருத்தத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த கமல்ஹாசன் “ அனிதா என்ன ஊர், என்ன பெயர் என்றெல்லாம் நான் பார்க்க விரும்பவில்லை. என் பெண்ணாக இருந்தால்தான் நான் கோபப்பட வேண்டுமா? கனவோடு வந்த அனிதாவை மண்ணோடு மண்ணாக புதைத்துவிட்டார்கள். கட்சி கடந்து, மாநிலம் கடந்து மக்கள் இதற்காக எதிராக போராட வேண்டும்.


 

 
அனிதாவின் தற்கொலை மிகுந்த வேதனை அளிக்கிறது. நல்ல ஒரு மருத்துவரை நாம் இழந்துவிட்டோம். வரும் காலங்களில் இதுபோன்ற துயரங்கள் நிகழக்கூடாது. மாணவி அனிதாவின் தற்கொலைக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். கனவோடு வாழ்ந்த அனிதாவை மண்ணோடு புதைத்து விட்டனர். திருமாவளவன் உள்ளிட்டோர் வெகுண்டு எழ வேண்டும்
 
மத்திய அரசு, மாநில அரசு, நீதிமன்றங்கள் அனைத்துமே நாம் அமைத்ததுதான். அங்கேயெல்லம் சென்று நாம் போராட வேண்டும். ஆனால், வாதாட வேண்டியவர்கள் அனைவரும் பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்புறம் எப்படி நியாயம் கிடைக்கும்? இது போன்ற தற்கொலைக்கு பின்னர்தான் நீங்கள் பாடம் கற்பீர்களா?. நீங்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டாம். நாங்கள் உங்களுக்கு கற்றுக்கொடுக்கிறோம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்