ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

Mahendran
சனி, 21 செப்டம்பர் 2024 (16:42 IST)
மக்கள் நீதி மையம் கட்சியின் பொதுக்குழு என்று சென்னையில் நடந்த நிலையில் இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் நிரந்தர தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின் அவர் இந்த கூட்டத்தில் பேசியதாவது:
 
நான் இங்கே அமர வரவில்லை. எனக்கு எந்த சீட் கொடுக்கப்பட்டாலும் அதில் அமர்ந்து விட்டேன் என்றால், நான் வேலை செய்யவில்லை என்று அர்த்தம். நாம் நடந்து கொண்டே இருக்க வேண்டும். காந்தியை நாம் இறக்கை வைத்த ஒரு தேவதையாக பார்க்க வேண்டும். காந்தி போன்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவரைப்போன்ற வீரம் மற்றவரிடம் உள்ளதா என நான் என்னைப் பார்த்து கேட்டுக் கொண்டேன்.
 
நேர்மைக்கான சோதனைகள் நிறைய என்னிடம் வந்துள்ளன. நீங்கள் எல்லாம் ஏன் அரசியலுக்கு வந்தீர்கள்? அதற்கு ஒரு மாதிரியான மூளை வேண்டும் எனக் கூறினார்கள். நான் என்ன வேட்டைக்கா செல்கிறேன் என கூறினேன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் எனக் கூறினார்கள். மக்களை நான் நேரடியாக எனது 4 வயது முதல் பார்த்து வருகிறேன். தோற்ற அரசியல்வாதி நான் தான். தோற்பது என்பது நிரந்தரம் அல்ல. அதேபோன்று பிரதமர் பதவி நிரந்தரம் அல்ல.
 
 
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மிகவும் ஆபத்தான பேச்சு. அது தவறு என்பது உலக அரசியலுக்கு தெரியும். அது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை நாம் உணர வேண்டும். இந்தியாவிற்கு அது தேவைப்படாது என்பது என்னுடைய கருத்து. 15 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று அறிவித்திருந்தால், இந்நேரம் இந்தியா என்னவாக இருக்கும். கோவிட் என்று சொல்லக்கூடிய ஒரு கொடிய நோயிலிருந்து தப்பித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
 
இந்தியாவிலேயே நேர்மையானவர்கள் என்றால் அது தமிழ்நாடு தான். ஜனத்தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்று சொன்னவுடன் கேட்டது தமிழ்நாடு தான். ஆனால் இன்று சொல்கிறீர்கள் உங்களுக்கு எதற்கு அத்தனை நாடாளுமன்ற தொகுதிகள் என்று, இன்று நாட்டை நடத்திக் கொண்டிருப்பது நம்முடைய பணம். அதைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும். அங்கு நிதியை அள்ளி அள்ளி கொடுத்துவிட்டு, அங்கு கர்ணனாகவும், இங்கு கும்பகர்ணாகவும் இருக்கிறீர்கள். அங்கு ராக்கெட் விட்ட நம்ம, இங்கு ஒரு துரும்பை கூட விட முடியவில்லை. ஒரு தமிழன் பிரதமராக ஆக முடியுமா? அதற்கு நாம் தயாராக வேண்டும்.
 
நிரந்தரமாக அமர முடியாத அசவுகரியமாக இருக்க வேண்டும். அது எந்த அரசாக இருந்தாலும் சரி, ஆட்சியில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, இதற்கு முன்பு இருந்தவர்களாக இருந்தாலும் சரி. ஒவ்வொரு 5 ஐந்து ஆண்டுகளும் நாம் தான் தேர்வு செய்ய வேண்டும். நான் அரசியலுக்கு வந்தது, எனக்காக அல்ல நமக்காக கூட அல்ல. நாளைக்காக. இன்று பற்றி கவலைப்பட்டுக் கொண்டு இருந்தால் விடியாது. நாளை என்றால் அது பழுக்கும். படத்தில் கூட ஒரு வசனம் வைத்தேன், விதை நான் போட்டது. பழம் அவன் சாப்பிட்டு போவான். ஆனால் விதை நான் போட்டது.
 
 
கோயம்புத்தூரில் நடந்தது தோல்வி என்றால், அவர்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது வெற்றி அல்ல. குற்றமுள்ள நெஞ்சுக்கு தான் குறுகுறுக்கும். உங்கள் தலைவர் எவ்வளவு பெரிய ஆள் என்று கூட்டம் போட்டு சொல்லாதீர்கள். உங்கள் கூட்டம் எவ்வளவு பெரியது என்று காட்டுங்கள். அதன் பிறகு என்னை பெரிய ஆள் என்று கூறுங்கள். அப்போது நான் நம்ப ஆரம்பிப்பேன். நாம் அனைவரும் நேர்மையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வீதிகளிலும் மக்கள் நிதி மய்யம் தொண்டர்கள் இருக்க வேண்டும்.
 
ஏதாவது ஒரு பிரச்னை என்றால் மக்கள் நீதி மய்யம் கட்சி காரர்கள் கேட்பாங்க என்று நிலை வேண்டும். இறங்கி வேலை செய்ய வேண்டும். நான் அண்ணன், அப்பா என்ற முறையில் விமர்சனங்களை மட்டுமே கூறிக் கொண்டிருப்பேன். என்னிடம் ஒண்ணுமே இல்லாத போது கூட என் பின்னால் வந்தவர்கள் இருக்கிறார்கள். நாளை அரசியல் நம்மை பார்த்து பேச போகிறது. உங்கள் தொண்டர்கள் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலை செய்தார்கள் என முதலமைச்சர் கூறினார். நல்லா வளர்த்து கொண்டீர்கள். உங்கள் பிள்ளைகள் என முதலமைச்சர் கூறினார். அப்போது எனக்கு ஆனந்த கண்ணீர் பரிசாக கிடைத்தது.
 
2026 தேர்தலை நோக்கி செல்ல வேண்டும், என்பதை எனது அன்பு கட்டளையாக எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு வித்தியாசமான விவசாயம். இதில் பொறுமை வேண்டும். தினம்தோறும் அதனைத் தோண்டி பார்க்க கூடாது. என்னைக் கேட்டார்கள் என்ன திரும்பவும் சினிமாவிற்கு போய்விட்டார் என்று, பின்ன என்ன நான் கோட்டைக்கு சென்று கஜானா திறக்கவா? என கேட்டேன். ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்றால் அதற்கு பணம் தேவைப்படுகிறது. அதனால் தான் சினிமா செல்கிறேன்.
 
நீங்கள் மீண்டும் சினிமாவுக்கு சென்று விட்டீர்கள் முழுநேர அரசியல்வாதியாக மாறுங்கள் என்று சொல்கிறார்கள். பல அரசியல்வாதிகள் சீட்டாட்டம் ஆடியதை நான் பார்த்திருக்கிறேன். முழு நேர அரசியல்வாதி யாரும் இல்லை என பெரியார் கூறியுள்ளார். எனவே முழு நேர அரசியல்வாதி என்று யாரும் சொல்லிக் கொள்ள வேண்டாம். முழு நேர அரசியல்வாதியாக மாறி உங்கள் குடும்பங்களை தெருவில் விட்டுவிட வேண்டாம். நான் காந்தியடிகளின் தோழன், தொண்டன், மாணவன், விமர்சகணும் கூட. எப்படி எல்லாம் இந்த அரசியல் உலகம் நம்மை ஈற்கும் என எனக்கு தெரியும். நாம் உணவுக்காக கூடிய காக்கை கூட்டமாக இருக்கக் கூடாது.
 
எனக்கு மிகப்பெரிய இடைஞ்சல்கள் கொடுத்தவர்கள் எல்லாம் நான் பார்த்து வளர்ந்துள்ளேன். நம்மை நாட்டை விட்டு துரத்தி விடுவார்கள் என நினைத்தவர்கள் எல்லாம் அவர்களைப் பார்த்து நான் வளர்ந்துள்ளேன் அவருடன் நன்றாக பழகி உள்ளேன். நாளை நமதாக வேண்டும். அதனை கட்டுவித்த சிற்பியாக நாம் மாற வேண்டும். அதற்கான வேலையை நாம் செய்ய வேண்டும். செய்யுங்கள் நாளை நமதே ஆகும்”
 
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்