அடுத்து வரவிருக்கும்‌ 2 வாரங்கள்‌ மிக முக்கியமானது: கொரோனா குறித்து கமல்ஹாசன் அறிக்கை

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (08:30 IST)
கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் இருக்க தமிழக அரசு மிக தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அடுத்து வரும் இரண்டு வாரங்கள் மிகவும் முக்கிய என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
 
சுமார்‌ 8 வாரங்களாக உலகையே உலுக்கிக்‌ கொண்டிருக்கும்‌ கொரோனா வைரஸ்‌ கடந்த 3 வாரங்களாக இந்தியாவிலும்‌ ஊடுருவியுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோரின்‌ எண்ணிக்கை 105 தான்‌ என்றாலும்‌, அடுத்து வரவிருக்கும்‌ 2 வாரங்கள்‌ மிக முக்கியமானது. ஏனென்றால்‌ சைனா, இத்தாலி, ஈரான்‌, ஸ்பெயின்‌ என பாதிப்படைந்த எல்லா நாடுகளிலும்‌ பாதிக்கப்பட்டவர்களின்‌ எண்ணிக்கை 3வது வாரத்தில்‌ இருந்து 4வது மற்றும்‌ 5வது வாரத்தில்‌ ஆறிலிருந்து - பத்து மடங்காக அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால்‌ இது இந்தியாவிலும்‌ நடக்காமல்‌ தடுக்க முடியும்‌.
 
அதை சாத்தியப்படுத்த தமிழக அரசு அனைத்து மருத்துவர்‌ மற்றும்‌ மருத்துவமனைகளோடு (பொது மற்றும்‌ தனியார்‌) இணைந்து செயல்பட வேண்டும்‌. வைரஸ்‌ தொற்றை சமாளிக்க முறையான வழிமுறைகளை அரசு அனைத்து மருத்துவர்களுக்கும்‌ விளக்குவது சுகாதாரத்துறையின்‌ செயல்வேகத்தை அதிகப்படுத்தும்‌. எவருக்கேனும்‌ வைரஸ்‌ தொற்றின்‌ அறிகுறிகள்‌ இருப்பின்‌ அவர்கள்‌ எல்லோரையும்‌ உறுதிப்படுத்தும்‌ பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைகளுக்கு மட்டும்‌ அனுப்புவது என்ற நடைமுறை, நோய்‌ தொற்றில்லாதவருக்கும்‌, கூட்டத்தினால்‌ அந்த இடத்திலிருந்து வைரஸ்‌ பரவிட வாய்ப்புக்களை உருவாக்கும்‌. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில்‌ தனியார்‌ மருத்துவமனைகளோடு சந்திப்பு நடத்தி நோய்‌ தொற்றை உறுதி செய்யும்‌
 
பரிசோதனைகளை எடுக்க வழிமுறைகளையும்‌, அதிகாரமும்‌ கொடுத்தால்‌ வைரஸ்‌ தொற்று வேகமாக கண்டறியப்படுவதோடு, வைரஸ்‌ தொற்று உள்ளதாக சந்தேகிக்கப்படுபவர்கள்‌ ஒரே இடத்தில்‌ கூடுவதையும்‌ தவிர்க்கலாம்‌. வைரஸ்‌ தொற்று உள்ளதா என்பதை உறுதிப்படுத்தும்‌ பணி விரைந்து நடந்தால்‌ தான்‌ உரிய நேரத்தில்‌ சிகிச்சை என்பதும்‌ பரவாமல்‌ தடுப்பதும்‌ சாத்தியம்‌. அதற்கு அரசு இப்போது உபயோகப்படுத்தும்‌ 4 பரிசோதனை கூடங்கள்‌ மட்டும்‌ போதாது. கொரோனா பரிசோதனை செய்ய அங்கீகரிக்கப்பட்ட சோதனைக்கூடங்களிற்கும்‌ அந்த பணியை செய்திட அங்கீகாரமும்‌, வழிமுறைகளையும்‌ வழங்கினால்‌ மட்டுமே வைரஸ்‌ தொற்று கண்காணிப்பு சீரிய முறையில்‌ தாமதமின்றி நடந்து, நோய்‌ பரவுதலை தடுக்க முடியும்‌.
 
பொது இடங்களில்‌ கூடுவதற்கு எதிராக மக்களை அறிவுறுத்தியிருந்தாலும்‌, நோய்‌ தொற்று பரவும்‌ பட்சத்தில்‌ அதை எதிர்கொள்ள தயாராக ஒரே நேரத்தில்‌ அதிக பேருக்கு நோய்‌ தொற்றை அறிய உதவும்‌ இரத்த மாதிரி பரிசோதனை மூலம்‌ நோய்‌ தொற்றை கண்டறியும்‌ சாதனத்தை தயாராக வைத்திருப்பதும்‌ மிக மிக அவசியம்‌.
 
தனிமனித சுகாதாரம்‌ மற்றும்‌ கண்டறியும்‌ வழிமுறைகள்‌ துரிதமாகவும்‌, பரவலாகவும்‌ இருந்தால்‌ வைரஸ்‌ தொற்றை முறியடிக்கலாம்‌. விழிப்புடன்‌ இருப்போம்‌.
 
இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்