கமல்ஹாசன் கட்சியில் விழுந்த இன்னொரு விக்கெட்.. மாநில கட்டமைப்பு செயலாளர் விலகல்..!

Mahendran
வியாழன், 27 ஜூன் 2024 (14:07 IST)
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விடை பெறுகிறேன் என்று கமல்ஹாசன் கட்சியின் மாநில கட்டமைப்பு செயலாளர் சிவ இளங்கோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
தலைவர் நம்மவர் டாக்டர். கமல்ஹாசன் அவர்களுக்கு வணக்கம்,
 
மக்கள் நீதி மய்யத்தில் மாநில நிர்வாகக்குழு & மாநிலச் செயலாளராக இணைந்து இன்றுடன்(26-06-2024) 3 ஆண்டுகள் நிறைவு பெற்றது. என்மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை வழங்கிய தங்களுக்கு இத்தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடனான இந்த மூன்றாண்டு கால அரசியல் பயணம் பெரிய அனுபவமாக அமைந்தது.
 
தற்போதைய அரசியல் சூழலில் மக்கள் நீதி மய்யத்தில் தொடர்ந்து பயணிக்க இயலாத நிலையில் உள்ளேன். எனவே நான் தற்போது வகித்து வரும் மாநில நிர்வாகக்குழு & மாநிலச் செயலாளர் (கட்டமைப்பு) மற்றும் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்.
இதுவரை கட்சி வளர்ச்சிப் பணிக்கு எனக்கு ஆலோசனை வழங்கி வழிகாட்டுதல் கொடுத்த தங்களுக்கும், துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர், மாநிலச் செயலாளர்கள், மண்டலச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொருளாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், அமைப்பு மற்றும் அணிகளின் ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து மய்ய உறவுகளுக்கும் நன்றி!
 
மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக 54 நாட்கள், 66 கூட்டங்கள், 130 சட்டமன்ற தொகுதிகளில் எனது தலைமையில் முன்னெடுத்த மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தின் 293 பக்கம் ஆய்வறிக்கையினை இத்துடன் இணைத்துள்ளேன்.
 
மக்கள் நீதி மய்யத்தில் இணைவதற்கு முன்பு தகவல் பெறும் உரிமைச் சட்டம், கிராமசபை, ஏரியாசபை உள்ளிட்டவை குறித்து கட்சியினருக்கு பயிற்சி அளித்தது போன்று தாங்கள் கேட்டுக் கொண்டால், தொடர்ந்து இதுபோன்ற பயிற்சிகளை மய்ய உறவுகளுக்கு கொடுக்க தயாராக உள்ளேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மய்யக் கொள்கைகள் வெற்றி பெறவும், கட்சி மேலும் வளர்ச்சியடையவும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
 
 
இவ்வாறு சிவ இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்