சமீபத்தில் ’இந்தியன் 2 ’படத்தின் படப்பிடிப்பில் விபத்து நடந்து மூன்று உயிர்கள் பலியான விவகாரம் குறித்து தன்னை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் துன்புறுத்தி வருகின்றனர் என்று நடிகர் கமலஹாசன் திடுக்கிடும் புகார் ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இந்தியன் 2 பட விபத்து சம்பந்தமாக கமல்ஹாசன் ஆஜராக வேண்டியதில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கமல்ஹாசன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து குறித்து ஏற்கனவே தன்னிடம் போலீசார் மூன்று மணி நேரம் விசாரணை செய்துவிட்ட நிலையில் தற்போது அந்த விபத்து எப்படி நடந்தது என்பதை நடித்து காட்ட வேண்டும் என்று காவல்துறையினர் தன்னை துன்புறுத்துவதாகவும், அரசியல்வாதியாக இருப்பதால் துன்புறுத்தும் நோக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக்வும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்ததாக தெரிகிறது.
இந்த வழக்கை அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் இன்று மாலை இந்த மனு விசாரணைக்கு வரும் என்றும் கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து, உயர் நீதிமன்றம் தற்போது கூறியுள்ளதாவது:
விசாரணைக்கு தேவைப்பட்டால் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக சம்பவ இடத்தில் கமல்ஹாசன் ஆஜராகி விளக்கம் அளிக்கத் தேவையில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கு காவல்துறை தரப்பில் , விபத்தில் நேரில் பார்த்த சாட்சி என்ற அடிப்படையில் கமல்ஹாசனிடன் விசாரிக்க வேண்டியுள்ளது எனவும், நடிகர் கமலை விசாரிக்கும் விவகாரத்தில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.