மும்பையில், நடிகையும் சமூக வலைதள பிரபலமுமான ராஜஸ்ரீ மோர் என்பவரின் கார் மீது அரசியல்வாதியின் மகன் ஒருவர் கார் மோதிய விவகாரம், சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்ரீ மோர் இந்த சம்பவம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், ரஹீல் தனது கார் மீது மோதியதாகவும், பின்னர் வாகனத்திலிருந்து இறங்கி தன்னுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். அரசியல்வாதியின் மகன் அரை நிர்வாணமாக இருந்ததாகவும், மதுபோதையில் இருந்ததாகவும் ராஜஸ்ரீ அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து தான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக ராஜஸ்ரீ தெரிவித்துள்ளார். காவல்துறையினர் விசாரணையை தொடங்கிவிட்டதாகவும், ரஹீல் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், ஆனாலும் இந்த சம்பவத்தால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் நடிகை ராஜஸ்ரீ, மராட்டிய சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார். அதன்பின் அவர் மன்னிப்பு கோரிய நிலையில் தற்போது இந்த விபத்து காரணமாக அவர் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.