கழுகூரில் ஆபத்தான மின் கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2016 (19:15 IST)
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள கழுகூர் ஊராட்சிக்கு உட்பட்ட அனைக்கரைபட்டி காலனியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.


 


இந்த பகுதிக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு மின்கட்டணம் செலுத்தியும், பழுதான மின்விளக்குகளை அவ்வப்போது மாற்றி அமைத்தும் பராமறிப்பு பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் அனைக்கரைபட்டி காலனியில் மாரியம்மன் கோவில் தென்புறம் உள்ள சிமெண்ட் வீதியில் இருக்கும் குடியிருப்புகள் அருகே இரு மின்கம்பங்கள் கடந்த 2 வருடமாக பழுதாகி உள்ளது. இந்த மின்கம்பங்களில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் விடுபட்டு கம்பத்தின் மையப்பகுதியின் கம்பிகளின் பிடிமானத்தில் ஆபத்தான நிலையில் தாங்கி நிற்கிறது. 
 
பொதுமக்கள் குடியிருக்கும் மையப்பகுதியில் எந்த நேரத்திலும் தாய்ந்து விழும் என்ற அச்சத்தில் இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இது குறித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மின்கம்பங்களை மாற்றி அமைக்க இப்பகுதியை கண்காணிக்கும் மின்சாரத்துறை பணியாளரிடம் பொதுமக்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பழுதான மின்கம்பத்தை மாற்றி அமைக்க புதிய மின்கம்பங்களை பொதுமக்கள்தான் கொண்டு வரவேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.


 


இதனால் மின்கம்பங்களை கொண்டு வர வாடகை பணம் வசூல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு கடந்த 6 மாதங்களாக பழுதான மின்கம்பங்களை மாற்றி அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். விழிப்புணர்வு இல்லாத மக்களிடம் தவறான தகவலை கூறி அப்பாவி மக்களின் ஆபத்தை உணராமல்  மின்கம்பத்தை மாற்றி அமைப்பதில் கடந்த 6 மாதங்களாக தாமதப்படுத்தி வரும் ஒரு சில பணியாளர்கள் இருக்கிறார்கள் என சமூகஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
 
இதுகுறித்து மூட்டக்காம்பட்டி செயற்பொறியாளர் பார்த்தசாரதியிடம் போனில் கேட்டபோது: அனைக்கரைபட்டி காலனியில் பழுதான மின்கம்பம் பற்றி தகவல் இல்லை. புதிய மின்கம்பங்களை கொண்டு செல்வதில் பொதுமக்கள் யாரும் ஈடுபட தேவை இல்லை. பணியாளர்களே இப்பணிகளை செய்து விடுவார்கள். மேலும் உடனடியாக பழுதான மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்கப்படும் என்று கூறினார். 

சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்
அடுத்த கட்டுரையில்