முன்னாள் அதிபர் முஷரப்பின் வங்கி கணக்குகள் முடக்கம், சொத்துகள் பறிமுதல்

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2016 (19:05 IST)
வழக்கில் ஆஜராக தவறிய பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்பின் வங்கி கணக்குகளை முடக்கி வைக்கவும், அவரது சொத்துகளை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 


தேசத்துரோக வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக தவறிய பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்பின் வங்கி கணக்குகளை முடக்கி வைக்கவும், அவரது சொத்துகளை பறிமுதல் செய்யவும் சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது அந்நாட்டு அரசு தேசத்துரோக வழக்கு உள்பட பல வழக்குகளை தொடர்ந்துள்ளது. இதனால் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சிந்து மாகாண உயர் நீதிமன்றம், முஷரப் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடையை கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் நீக்கியது.இதை எதிர்த்து, பாகிஸ்தான் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, முஷரப் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்கி, விசாரணை முடிவும் வரை அவர் வெளிநாடு செல்ல தடை நீடிக்கும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முஷரப் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முஷரப் வெளிநாடு செல்வதற்கு அரசு விதித்துள்ள தடையை நீக்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, முஷரப் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு அவரது வழக்கறிஞர் அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கு அரசும் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து,  முஷரப் கடந்த மார்ச் மாதம் 18-ம் தேதி அதிகாலை 3.55 மணியளவில் கராச்சி நகரில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் புறப்பட்டு சென்றவர் நாடு திரும்பவில்லை. இந்நிலையில், பெஷாவர் நகரில் உள்ள உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதி மன்றத்தில் முஷரப்புக்கு எதிரான தேசத்துரோகம் மற்றும் ஆட்சியை கவிழ்க்க சதி செய்த குற்றம் ஆகியவை தொடர்பான வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்குகளில் ஆஜராகும்படி பல முறை சம்மன் அனுப்பியும் முஷரப் ஆஜராகவில்லை. இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்டவர் இல்லாமல் இவ்வழக்கை விசாரிக்க முடியாது என தீர்மானித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள், முஷரப் தாமாக முன்வந்து சரணடைந்தாலோ, அல்லது, கைது செய்யப்பட்டாலோதான் இவ்வழக்கு தொடர்பான விசாரணையை தொடர முடியும் என இன்று அறிவித்தனர்.

அதற்கிடையில், உயர் நீதிமன்ற நீதிபதி முஷரப்பின் வங்கி கணக்குகளை முடக்கி வைக்கவும், அவரது சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, துபாயில் இருந்தவாறு ‘ஸ்கைப்’ மூலம் கோர்ட் விசாரணையில் முஷரப் கலந்து கொள்ள அனுமதி கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்திருந்தனர்.
அடுத்த கட்டுரையில்