காலசம்ஹாரவிழாவில் தருமபுர ஆதீன மடாதிபதி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

J.Durai
திங்கள், 22 ஏப்ரல் 2024 (15:23 IST)
மயிலாடுதுறை  மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் அமைந்துள்ள அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம் புகழ்பெற்றதாகும்.
 
புராண காலத்தில், பக்தர் மார்க்கண்டேயர் உயிரை பறிப்பதற்காக, எமன் பாசக்கயிற்றை வீசியபோது, மார்க்கண்டேயர், சிவலிங்கத்தை கட்டியணைத்தார். அப்போது, இறைவன் காலசம்ஹாரமூர்த்தியாக தோன்றி, எமனை சம்ஹாரம் செய்ததாக, ஆலய வரலாறு கூறுகின்றது. 
 
பின்னர் பூமா தேவியின் வேண்டுகோளுக்கு இணங்க, எமனை, சிவபெருமான் மீண்டும் உயிர்ப்பித்தார். மார்கண்டேயருக்கு என்றும் சிரஞ்சீவி என்ற வரத்தை இறைவன் தந்ததால் இவ்வாலயத்தில் ஆயுள்விருத்தி வேண்டி ஆயூஸ் ஹோமம் செய்து 60 வயது முதல் வயதான தம்பதிகள் திருமணங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
 
வருடம் 365 நாட்களும் திருமணங்கள் நடைபெறும் ஒரே தலம். இந்த ஆலயத்தின் வரலாற்றை விளக்கும் வகையில், ஆண்டுதோறும், சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் எமன் சம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். 
 
அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 6ஆம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகிறது.
 
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான எமனை சிவபெருமான் சம்ஹாரம் செய்யும் நிகழ்வு  நடைபெற்றது.
 
இதனையொட்டி காலசம்ஹாரமூர்த்தி, பாலாம்பிகையுடன் வீரநடன மண்டபத்திற்கு எழுந்தருளி வீரநடனம் புரிந்தார். பின்னர், எமன் எருமைக்கடா வாகனத்தில் மார்க்கண்டேயரை துரத்தும் நிகழ்ச்சியும், எமனை இறைவன் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
 
எமதர்மன் சம்ஹாரம் செய்யப்பட்டதால், பூமியில் இறப்பு என்பதே இல்லாமல் போனதால்  பூமியின் பாரத்தை தாங்கமுடியாத பூமாதேவி தன் வேதனையைத் தீர்க்கும்படி சிவபெருமானை பிரார்த்தித்து மீண்டும் எமனை உயிர்பிக்கும் வரலாற்று நிகழ்ச்சியும் நடைபெற்றது.
 
தொடர்ந்து மகாதீபாரதனை செய்யப்பட்டு பஞ்சமூர்த்திகளுடன் காலசம்ஹாரமூர்த்தி, பாலாம்பிகையுடன்  வீதியுலா நடைபெற்றது. இதில் தருமபுர ஆதீனம் 27 மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்