2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அதிமுகவா? திமுகவா? என்று தான் இருக்கும் என்றும் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமியா? அல்லது ஸ்டாலினா? என்றுதான் இருக்கும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் 2026 ஆம் ஆண்டு தேர்தலைப் பொறுத்தவரை அதிமுக, திமுக நேருக்கு நேர் போட்டியிடும் என்றும் எடப்பாடி பழனிச்சாமியா? ஸ்டாலினா என்ற கேள்வி தான் மக்கள் மத்தியில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
அதிமுக தனித்து நின்றாலும் மகத்தான வெற்றி பெறும் என்றும் ஆனால் அதே நேரத்தில் திமுக கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேர வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
அதிமுக - பாஜக கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி அதை தெளிவாக தெரிவித்துவிட்டார் என்றும் இனிமேல் கூட்டணி பற்றி அண்ணாமலை பேச வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார். பாஜக எத்தனை முறை படை எடுத்தாலும் தமிழகத்தில் வெற்றி பெறப் போவதில்லை என்றும் தமிழக மக்கள் பாஜகவை புறக்கணிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.