எனது முழு பேட்டியை படியுங்கள்: ராமரை தெரியாது என்று கூறிய ஜோதிமணி எம்பியின் டுவிட்!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (08:27 IST)
ராமர் என்றால் யார் என்று எங்களுக்கு தெரியாது என்றும் ராமரை நாங்கள் வழிபட மாட்டோம் என்றும் ஜோதிமணி அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் அந்த பேட்டி கொடுத்தது என்றும் அந்த பேட்டியின் முழு வடிவத்தை படியுங்கள் என்றும் ஜோதிமணி எம்பி தனது டுவிட்டரில் அந்த பேட்டியை பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள முழு பேட்டி இதோ:
 
ஜோதிமணி: நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன். எனக்கு ராமரைத் தெரியாதுதான். நாங்கள் இந்த மண்ணின் பூர்வ குடிகள். நாங்கள் எங்கள் மூதாதையாரை வணங்கும் வழக்கம் கொண்டவர்கள். நீங்கள் தமிழ்நாட்டில் யாரை வேண்டுமானாலும் கேளுங்கள்.
 
எங்கள் ஊரில் ராமர் கோயில்கள் கிடையாது. நான் வாரா வாரம் வழிபடப் போகும் கோயில் எங்கள் குலசாமி,  மூதாதையாருடையது. இதே போல வடகிழக்கு மாநில மக்கள், ஆதி குடிகள், பட்டியலினத்தவர், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் எல்லாருமே தத்தமது இனத்து வழிபாட்டு முறைகளைத்தான் பின்பற்றுகிறார்கள்.
 
நான் ராமாயணம்,மகாபாரதம் எல்லாம் படித்திருக்கிறேன்.ஆனால் ராமரை வழிபடும் வழக்கம் எங்களிடம் இல்லை. தேசிய அரசியலுக்கு வரும் வரை இது குறித்து யோசிக்க வேண்டிய அவசியமே கூட எங்களுக்கு இருக்கவில்லை.
 
நிருபர்: அதெல்லாம் சரிதான். ஆனால் அதற்காக அடுத்தவர் வழிபடும் ஒரு கடவுளின் இருப்பையே கேள்விக்குள்ளாக்க முடியுமா?
 
ஜோதிமணி: அப்படியெல்லாம் செய்யவில்லை. சொல்லப் போனால் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை என்று மன்மோகன் சிங் சொல்லவே இல்லை. அவர் சொன்னதெல்லாம் இதுதான்: யாருக்கெல்லாம் பொருளாதார வளர்ச்சியில் பங்கு கிடைக்கவில்லையோ, அவர்கள் முஸ்லிமோ, தலித்தோ, ஆதிகுடியோ அவர்களுக்கு தேச வளங்களில் முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்றுதான் பேசி இருக்கிறார். முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரமும் இதையே வேறு வகையில் குறிப்பிட்டுப் பேசி இருக்கிறார்:
 
என்னிடம் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஒன்று நன்றாக சாப்பிட்டு செழிப்பாக இருக்கிறது; இன்னொன்று நோஞ்சனாக உள்ளது. நான் என் உணவை நோஞ்சான் பிள்ளைக்குத்தான் கொஞ்சம் அதிகமாக சேர்த்துக் கொடுப்பேன். அப்போதுதான் இரண்டு பிள்ளைகளும் சமமாக வளரும், என்றார். அதைத்தான் மன்மோகன் சிங் சொன்னார். பெண்களாகிய நாம் ஏன் அரசியல் இட ஒதுக்கீடு கேட்கிறோம்? காரணம் நாம் அதிகாரமின்றி இருக்கிறோம். எனவே நமக்கு இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது... 
 
நிருபர்: இப்போது இன்றைய அரசியல் விவாதங்களை பாஜகதான் தீர்மானிக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?
 
தேசிய கீதத்தை பாட மாட்டேன் என்றவர்கள் இப்போது பாடிக் கொண்டிருக்கிறார்கள். வந்தே மாதரம் கோஷமிட மறுத்தவர்கள் இப்போது இடுகிறார்கள்... 
 
ஜோதிமணி: இதையெல்லாம் நிஜமாகத்தான் சொல்கிறீர்களா? எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து காங்கிரஸ் கூட்டங்களில் நாங்கள் பாடிக்கொண்டு இருக்கிறோம். வந்தே மாதரம் கோஷமித்துக் கொண்டுதான் இருக்கிறோம். தமிழ்நாட்டிலேயே எங்கள் காங்கிரஸ் கூட்டங்கள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கி தேசிய கீதத்தில்தான் முடியும். இதெல்லாமே பாஜக பரப்பும் ஆதாரமற்ற பொய்கள்தான். 
 
நிருபர்: கடைசியாக, நீங்கள் இந்து மதத்துக்கு ஆதரவாக இருக்கிறீர்கள். இந்துத்துவத்துக்கு எதிராக உள்ளீர்கள்; அவ்வளவுதானே? 
 
ஜோதிமணி: நான் உண்மையான இந்து எனில் நான் இந்துத்துவத்துக்கு எதிராகத்தான் இருக்க வேண்டும். காரணம், அவர்கள் இந்து மதத்தை தவறாக பிம்பப்படுத்துகிறார்கள். இந்து மதத்துக்கு கெட்ட பெயர் வாங்கித் தர முயல்கிறார்கள். எனவே ஒவ்வொரு இந்துவின் கடமையும் பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் முன்னெடுக்கும் இந்துத்துவத்தை எதிர்ப்பதாக மட்டுமே இருக்க வேண்டும். 
 
நிருபர்: நன்றி

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்