ஆண்டாள் பற்றி தெரிவித்த கருத்துகளுக்கு கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலிறுத்தி மணவாள மாமுனிகள் சன்னதியின் ஜீயர் சடகோப ராமானுஜர் இன்று உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கவிஞர் வைரமுத்து வைணவ பெண் கடவுள் ஆண்டாள் பற்றி தவறான வார்த்தையை குறிப்பிட்டு பேசியதாக சர்ச்சை எழுந்தது. அதனை தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் வைரமுத்துவிற்கு எதிராக கருத்து தெரிவித்தனர். அதுகுறித்து வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்பும் எதிர்ப்பு குரல் இன்னும் அடங்கவில்லை.
வைரமுத்துவின் கருத்துக்கு பிரபல நாட்டுப்புற பாடகியான விஜயலட்சுமி தன் எதிர்ப்பை தெரிவித்ததோடு உண்ணாவிரதமும் இருந்து வருகிறார். இந்நிலையில், ஆண்டாள் பற்றி தவறாக பேசியதற்காக, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சன்னதியில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என மணவாள மாமுனிகள் சன்னதியின் ஜீயர் சடகோப ராமானுஜர் நேற்று கூறியிருந்தார். அதன் பின்பும் வைரமுத்து மன்னிபு கேட்கவில்லை. எனவே, இன்று காலை 9 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் சன்னதியில் அவர் உண்ணாவிரதத்தை துவங்கியுள்ளார்.
இந்த விவகாரம் வைரமுத்துவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.