தமிழக முதல்வராக பதவியேற்க சசிகலா திட்டமிட்டு வரும் வேளையில் அவருக்கான எதிர்ப்பு பெருமளவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முன்னாள் அதிமுக சபாநாயகர் பி.எச்.பாண்டியனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியனும் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது ஜெயலலிதா மரணம் குறித்த பல்வேறு அதிர்ச்சியளிக்கும் காரணங்களை போட்டுடைத்தார் பி.எச்.பாண்டியன். ஜெயலலிதாவுக்கு சசிகலா விஷம் வைத்து கொன்றார் என்ற ரீதியில் பி.எச்.பாண்டியன் பேசினார்.
பின்னர் பேசிய மனோஜ் பாண்டியன் இதற்கு முன்னரே ஜெயலலிதா இவர்களால் தான் விஷம் வைத்து கொலை செய்யப்படுவேன் என அஞ்சியதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய மனோஜ் பாண்டியன், நானும், மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோவும் ஜெயா டிவி இயக்குனர்களாக இருக்கும் போது ஒருமுறை ஜெயலலிதா எங்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய ஜெயலலிதா நான் இந்த கும்பலால் விஷம் வைத்து கொல்லப்படுவேன் என்ற பயம் இருக்கிறது என கூறினார்.
அதற்கு நான் நீங்கள் ஒரு குடும்பத்திற்கு சொந்தமல்ல, அனைத்து அதிமுக தொண்டர்களுக்கும் சொந்தமானவர்கள், உங்களை பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம் என கூறியதாக மனோஜ் பாண்டியன் கூறியுள்ளார்.