திமுகவையும், ஸ்டாலினை அவமதிக்கும் எண்ணமில்லை: ஜெயலலிதா விளக்கம்

Webdunia
செவ்வாய், 24 மே 2016 (16:18 IST)
ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவிற்கு வருகைதந்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறிய முதல்வர் ஜெயலலிதா, மு.க.ஸ்டாலினுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்காதது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.


 
 
விதிகளை தளர்த்தி மு.க.ஸ்டாலினுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்க அதிகாரிகளை அறிவுறுத்தியதாகவும், ஸ்டாலினையோ, திமுகவையோ அவமதிக்கும் எண்ணமில்லை என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.
 
நேற்று நடந்த ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலினுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது, இந்த நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
அதில், பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான பகுதியில் ஸ்டாலின் அமர வைக்கப்பட்டுள்ளார்.
 
ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இடம், அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அது, ஸ்டாலினையோ, திமுகவையோ அவமானப்படுத்துவதற்காக அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். திமுகவையோ, ஸ்டாலினையோ அவமரியாதை செய்யும் நோக்கம் எனக்கு இல்லை என்றார்.
 
பதவியேற்பு விழாவுக்கு ஸ்டாலின் வருவது குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்தால், வரிசை முறையைத் தளர்த்தி ஸ்டாலினுக்கு முன் வரிசையில் இடமளிக்குமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டிருப்பேன் என்றார் ஜெயலலிதா.
 
மாநில நலனுக்காக எதிர்கட்சியுடன் சேர்ந்து செயல்பட எதிர்நோக்கியுள்ளதாக கூறிய ஜெயலலிதா, மாநில முன்னேற்றத்துக்காக ஸ்டாலினும், திமுகவும் செயல்படுவதற்கு எனது வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்