சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகன் விவேக் வீட்டில் மொத்தம் மூன்று துப்பாக்கிகளை வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் செய்த சோதனையில் பல கோடி ரூபாய் தொடர்பான ஆவனங்கள் சிக்கியுள்ளது.
ஆபரேஷன் கிளீன் மணி என பெயரிடப்பட்ட சோதனையில் சசிகலா குடும்பத்தினர் பினாமிகள் பெயரில் வாங்கிய சொத்துக்கள், முறைகேடான பணப்பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும் சிக்கியது. மொத்தமாக ரூ.1500 கோடி கணக்கில் வராத சொத்து ஆவணங்கள், கிலோக்கணக்கில் தங்க, வைரை நகைகள் சிக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில், சசிகலாவுடன் சிறையில் இருக்கும் இளவரசியின் மகன் விவேக் வசமாக சிக்கியுள்ளார் எனக்கூறப்படுகிறது. ஜெயா தொலைக்காட்சி மற்றும் ஜாஸ் சினிமாஸை இவர்தான் நிர்வகித்து வருகிறார். இவரின் வீட்டில் கடந்த 9ம் தேதி அதிகாலை தொடங்கிய சோதனை நேற்று மாலை 4 மணியளவில் முடிவிற்கு வந்தது. இதில் பல ஆவணங்களை அதிகாரிகள் அள்ளி சென்றனர். மேலும், அவரை வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், மீண்டும் அவரிடம் விசாரணை நடக்கும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், இந்த சோதனையில் அவரது வீட்டிலிருந்து 3 துப்பாக்கிகளை வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாகவும், அதில் ஒன்று உரிமம் பெறாத கள்ளத்துப்பாக்கி எனவும் செய்தி வெளியாகியுள்ளது.