சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

Siva

திங்கள், 28 ஏப்ரல் 2025 (14:43 IST)
சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா என அரசு டாக்டர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர், டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
ஒருபுறம் மறைந்த முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு விட்டு, அவர் பிறப்பித்த அரசாணைக்கு (GO.354) தடை போடுவது வரலாற்று பிழையாக அமையும் என்பதை தமிழக முதல்வர் புரிந்து கொண்டு, அரசு மருத்துவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
 
ஏற்கனவே 2019 ம் ஆண்டு அரசு மருத்துவர்கள் போராட்டத்தின் போது எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். மேலும் திமுக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றுவதாக தெரிவித்த முதல்வர், இன்னமும் சொன்னதை செய்யவில்லை.
 
 
சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா என்ற கேள்வி எழுகிறது. அரசாணை 354 ஐ அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றமே அரசுக்கு உத்தரவிட்டது. இருப்பினும் இதுவரை மருத்துவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
 
 
அரசாணையை (GO.354) அமல்படுத்த கோரி ஜூன் 11 ம் தேதி மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி பாதயாத்திரையை மருத்துவர்கள் மேற்கொள்ள உள்ளோம். அதற்கு முன்னதாகவே, அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை வழங்கிட தமிழக முதல்வரை வேண்டுகிறோம்.
 
 
இவ்வாறு  டாக்டர் எஸ். பெருமாள் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்