தற்போது மத்திய அரசு ஜிஎஸ்டி வரிவிகிதங்களை குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் ராகுல்காந்தியின் பழைய ட்வீட் வைரலாகி வருகிறது.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை) வரிகளின்படி 5, 12, 18, 28 என நான்கு அடுக்குகளில் வரிகள் விதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சமீபத்தில் தீபாவளிக்கு மக்களுக்கு பரிசு காத்திருப்பதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு ஜிஎஸ்டி வரி விதிப்பு அடுக்குகளை இரண்டாக குறைத்துள்ளது ஜிஎஸ்டி கவுன்சில். மேலும் அத்தியாவசிய பொருட்களுக்கான அதிகபட்ச ஜிஎஸ்டி வரம்பு 18 சதவீதமாக உள்ள நிலையில், ஐபிஎல், குட்கா உள்ளிட்ட சிலவற்றுக்கு மட்டும் 40 சதவீதமாக உள்ளது.
முன்னதாக 28 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பல தொழில்துறை நிறுவனங்களின் லாபம் குறைந்த நிலையில் தற்போது 18 சதவீதமாக குறைந்துள்ளது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் 2016ம் ஆண்டில் ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டது தற்போது ட்ரெண்டாக தொடங்கியுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு அறிமுகம் செய்யப்பட்டபோது அதிகமான வரிவிதிப்பு மக்களை பாதிக்கும் என கூறிய ராகுல்காந்தி, அதிகபட்ச ஜிஎஸ்டி வரி 18 சதவீதம் வரை மட்டுமே இருக்க வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அழுத்தம் தருகிறேன் என பதிவிட்டிருந்தார். கடந்த 2016ல் ராகுல்காந்தி கூறியது 9 ஆண்டுகளுக்கு பிறகு நடந்துள்ளதாக காங்கிரஸார் அதை பகிர்ந்து வருகின்றனர்.
Edit by Prasanth.K