இன்னொரு சிக்கல்.. சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து

Siva

திங்கள், 28 ஏப்ரல் 2025 (14:24 IST)
அடுத்தடுத்து திமுக அமைச்சர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு அமைச்சர் ஐ பெரியசாமியின் சொத்துக்குவிப்பு வழக்கில் அவரை விடுவித்த உத்தரவு ரத்து என உத்தரவு பிறப்பித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த 2006ம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ஐ பெரியசாமி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை அவர் மீதும், அவரது மனைவி மகன்கள் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
 
இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் நீதிமன்றம்,  அமைச்சரையும், அவரது குடும்பத்தினரையும் விடுதலை செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்வதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்து, வழக்கையும் மறுவிசாரணை செய்ய வேண்டும் என திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார். மேலும், விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே தமிழக அமைச்சர்களான ’செந்தில் பாலாஜி’ மற்றும் ’பொன்முடி’ பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், ’துரைமுருகன்’, ’எம்.ஆர்.கே’, ’பன்னீர்செல்வம்’ ஆகியோரும் சிக்கலில் உள்ளனர். தற்போது ’ஐ பெரியசாமி’க்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்