அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீது அந்நிய செலவாணி மோசடி வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதனால் சசிகலாவுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
வெளிநாட்டில் வசிக்கும் சுசீலா என்பவரிடமிருந்து உரிய அனுமதியில்லாமல், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் அவரின் சகோதரி மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோர் 1996-ஆம் ஆண்டு பணம் பெற்றதாக அமலாக்கத்துறை மூன்று வழக்குகளை தொடர்ந்திருந்தது.
இதனையடுத்து இந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை எழும்பூர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணை செய்து வழக்கிலிருந்து சசிகலா, டி.டி.வி. தினகரனை விடுவித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் சசிகலாவை வழக்கில் இந்து விடுவித்ததை எதிர்த்து அமலாக்கத் துறை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தது உயர்நீதிமன்றம்.
அதில், சசிகலாவை விடுவித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளது. சசிகலா அந்நிய செலவாணி மோசடி வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.