கோடைக்கால சீசனால் ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகளிலும் விடுமுறை அறிவித்துள்ளதால் மக்கள் பலரும் குடும்பம் சகிதமாக சுற்றுலாவுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் தமிழ்நாட்டின் பல சுற்றுலா பகுதிகளும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. முக்கியமாக ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள்.
கடந்த சில நாட்களாக ஊட்டிக்கு ஏராளமான பயணிகள் தொடர்ந்து வந்து செல்வதால் ஊட்டி மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஊட்டிக்கு வரும் வாகனங்கள் நெரிசல் இல்லாமல் வந்து செல்ல கோத்தகிரி மற்றும் குன்னூர் பாதைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது.
அதன்படி ஊட்டிக்கு செல்பவர்கள் குன்னூர் வழியாகவும், ஊட்டியிலிருந்து கீழே இறங்குபவர்கள் கோத்தகிரி வழியாகவும் செல்ல வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஒரு வழிப்பாதை உத்தரவு நாளை ஏப்ரல் 27ம் தேதி தொடங்கி மே 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊட்டி செல்ல விரும்புபவர்கள் சரியான பாதையில் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.